ஆரணியில் ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம்

ஆரணி, ஜன.7: ஆரணி அருகே ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி தாலுகா அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட விவசாயிகள், கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த புலவன்பாடி ஏரி, நெல்வாய்பாளையம் ஏரிகளுக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய்களை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் மழைக்காலங்களிலும் ஏரிகள் நிரம்புவதில்லை. எனவே, ஏரி நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். களம்பூர் சித்தேரி அருகே தடுப்பணை அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இதனை கண்டித்து புலவன்பாடி, நெல்வாய்ப்பாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் காங்கிரஸ் எஸ்சி பிரிவு மாவட்ட தலைவர் சேகர், மாவட்ட துணைத்தலைவர் அருணகிரி மற்றும் கட்சியினர் ஆரணி தாலுகா அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். பின்னர், அலுவலக அறையில் திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர். ஆனால், அதிகாரிகள் யாரும் அவர்களை கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து, தாலுகா அலுவலகம் எதிரே கொட்டும் மழையில் போராட்டத்தை தொடர்ந்தனர்.

தகவலறிந்த ஆரணி டிஎஸ்பி கோட்டீஸ்வரன் மற்றும் போலீசார் அங்கு வந்து விவசாயிகள் மற்றும் காங்கிரஸ் கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, நாளை(இன்று) காலை 11 மணியளவில் பொதுப்பணித்துறை, சர்வேயர், ஆர்ஐ, விஏஓ மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் நேரில் வந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அதன்பேரில், போராட்டத்தை கைவிட்ட அவர்கள், ‘இன்று காலை ஏரி நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் சாலை மறியலில் ஈடுபடுவோம். வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம்’ எனக்கூறி அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>