×

போக்குவரத்து ஆபீஸ் ரெய்டில் பணம் சிக்கியதால் ஆர்.டி.ஓ. உள்பட 6 பேர் மீது வழக்கு

திருப்பூர், ஜன.7: திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய ரெய்டில் கணக்கில் வராத பணம் ரூ.2.29 லட்சம் பறிமுதல் செய்தது தொடர்பாக ஆர்.டி.ஓ. உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  திருப்பூர் வடக்கு போக்குவரத்து அலுவலகம் சிறுபூலுவபட்டி ரோட்டில் செயல்பட்டு வருகிறது. இங்கு ஓட்டுநர் உரிமம், வாகனம் புதுப்பித்தல், வரி கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக வரும் மக்களிடம் அதிகாரிகள் அதிக பணம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன. இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு டி.எஸ்பி. தட்சிணாமூர்த்தி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு  வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அப்போது, ஆர்.டி.ஓ. குமாரின் மேசையில் சோதனையிட்டதில் கணக்கில் வராத பணம் ரூ.2 லட்சமும், அலுவலர்கள் மேசையில் இருந்து ரூ.29 ஆயிரமும் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து வடக்கு ஆர்.டி.ஓ. குமார் மற்றும் ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் 5 பேர் என மொத்தம் 6 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : RDO ,
× RELATED திருச்செங்கோடு அருகே விளை நிலங்களில்...