×

நேற்று 10வது முறையாக முதல்வராக பதவியேற்ற பின் மோடியின் காலில் விழ முயன்ற நிதிஷ் குமார்: வீடியோவை வெளியிட்டு எதிர்க்கட்சிகள் விமர்சனம்

பாட்னா: பிரதமர் மோடியின் காலில் விழ முயன்ற பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பீகார் சட்டப் பேரவை தேர்தலில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிப் பெற்றதால், முதல்வரின் பதவியேற்பு விழா நேற்று பாட்னாவில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, விழா முடிந்ததும் டெல்லிக்குத் திரும்ப பாட்னா விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது, அவரை வழியனுப்ப வந்த முதல்வர் நிதிஷ் குமார், மரியாதை நிமித்தமாக திடீரென பிரதமர் மோடியின் கால்களைத் தொட முயன்று கீழே குனிந்தார்.இதை சற்றும் எதிர்பாராத பிரதமர் மோடி, நிதிஷ் குமார் காலில் விழுவதைத் தடுக்கும் விதமாக, உடனடியாக அவரது கைகளைப் பிடித்துத் தடுத்து நிறுத்தி, கை குலுக்கி சில வார்த்தைகள் பேசினார்.

இந்தச் சம்பவம் தொடர்பான காணொலியை எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம் தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு, நிதிஷ் குமார் பிரதமர் மோடியிடம் அதிகப்படியாக அடிபணிந்து போவதாகக் கூறி கடுமையாக விமர்சித்துள்ளது. இந்த வீடியோ தற்போது வேகமாகப் பரவி, தேசிய அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக பிரதமர் மோடியின் காலில் நிதிஷ் குமார் விழுவது போன்ற செயல்களில் ஈடுபடுவது இது முதல் முறையல்ல.

இதற்கு முன்னதாக, கடந்த 2024ம் ஆண்டு நவம்பரில் தர்பங்காவில் நடந்த ஒரு நிகழ்ச்சியிலும், அதே ஆண்டு ஜூன் மாதம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடந்த கூட்டத்திலும், ஏப்ரல் மாதம் நடந்த மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போதும் அவர் பிரதமரின் காலைத் தொட முயன்றது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. தர்பங்கா நிகழ்ச்சியின்போது, நிதிஷ் குமாரை ‘பிரபல முதல்வர்’ என்று பாராட்டிய பிரதமர் மோடி, பீகாரில் ‘காட்டு தர்பார்’ ஆட்சியை ஒழித்து நல்லாட்சியை நிறுவியவர் என்றும் புகழ்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Nitish Kumar ,Modi ,Chief Minister ,Patna ,Bihar ,National Democratic Alliance ,Bihar Legislative Assembly elections ,
× RELATED தைவான் மெட்ரோவில் மர்ம நபர் கத்திக்குத்து; 3 பேர் பலி