எப்.சி. பெற வரும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்

ஊட்டி, ஜன. 7: ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு புதிய வாகன பதிவு, தகுதி சான்று பெறுதல், ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பித்தல், புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வருகின்றனர். தகுதி சான்று புதுப்பிக்க வரக்கூடிய அரசு பஸ்கள், கனரக லாரிகள் மற்றும் வாடகை வாகனங்களை இச்சாலையின் இருபுறங்களிலும் நிறுத்தி விடுகின்றனர்.  இதன் காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாள்தோறும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். சில சமயங்களில் பிரச்னைகளும் ஏற்பட்டு வருகிறது. தகுதி சான்று பெற வர கூடிய வாகனங்களை ஆய்வு செய்வதற்கு தனியாக இடம் ஏதுவும் இல்லாததால் இதுபோன்ற நிலை நீடிப்பதாக போக்குவரத்துத்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இப்பிரச்னை கலெக்டரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. இதனிடையே தகுதி சான்று பெற வரும் வாகனங்களை ஆய்வு செய்வதற்காக வேறு இடங்கள் கண்டறியும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விரைவில் இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் கூறுகையில், கோவிட்-19 காரணமாக தகுதி சான்று பெறாத வாகனங்கள் கால அவகாசம் டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்டது. அவகாசம் முடிந்த நிலையில் ஏராளமான வாகனங்கள் தகுதி சான்று பெறுவதற்காக வருவதால் இது போன்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.தகுதி சான்று பெற வரும் வாகனங்களை நிறுத்தி ஆய்வு செய்வதற்கு வசதியாக வேறு இடங்கள் கண்டறியும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. விரைவில் இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும், என்றார்.

Related Stories:

>