குன்னூர் நகராட்சி கமிஷனர் இல்லாததால் பொதுமக்களை அலைக்கழிக்கும் நகராட்சி ஊழியர்கள்

குன்னூர்,ஜன.7: நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சியின் கமிஷனராக பணியாற்றிய சரஸ்வதி  என்பவர் விதிமீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சீல் வைத்தும் பஸ் நிலையத்தில் உள் வாடகைக்கு விடப்பட்ட கடைகளை அகற்றுதல் போன்ற பணிகளை சிறப்பாக செயல்பட்டு வந்தார். இவரது பணி பொதுமக்கள் மத்தியில் வரவேற்பினை பெற்றது. இவரது அதிரடி நடவடிக்கையால் அதிர்ந்துபோன ஆளுங்கட்சியினர், அமைச்சர் வரை சென்று நெருக்கடி கொடுத்து கமிஷனர் சரஸ்வதியை பணியிட மாற்றும்படி கூறி வந்தனர். அதன் பின்னர் கமிஷனர் சரஸ்வதி பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். குன்னூர் நகரில் சீல் வைக்கப்பட்ட கட்டிங்களில் வேலைப்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. மேலும் சில காலம் நகராட்சியில் கமிஷனர் இல்லாததால் இன்ஜினியர் அந்த பணிகளை செய்து வந்தார். ஊழியர்கள் முறையாக பணிகளை செய்வதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டிவந்தனர். எனவே குன்னூர் நகராட்சியில் நிரந்தர கமிஷனர் பணியில் அமர்த்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் புதிதாக குன்னூர் நகராட்சி கமிஷனராக பாலு என்பவர் பணியமர்த்தப்பட்டார். புதிதாக பதவியேற்ற நகராட்சி கமிஷனர் பாலு ஆரம்ப காலம் முதலே விதி மீறிய கட்டிடங்களுக்கு சீல் வைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

பாலு தலைமையில் கொரோனா காலத்தில் குன்னூர் நகராட்சி சிறப்பாக செயல்பட்டு வந்தது. தொடர்ந்து ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் குறித்து நடவடிக்கை எடுத்த வந்த நகராட்சி கமிஷனர் பாலுவின் செயல்பாடுகள் பிடிக்காத ஆளுங்கட்சியினர் மீண்டும் அமைச்சர் வரை சென்று அழுத்தம் தந்து நகராட்சி கமிஷனரை பணி மாறுதல் செய்தனர். தற்போது பொறுப்பு கமிஷனராக பாலமுருகன் பணியாற்றி வருகின்றார். இருப்பினும் அங்குள்ள ஊழியர்கள் முறையாக பணியாற்றுவதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘தொழில் துவங்குவதற்காக கடனுதவி பெற விண்ணப்பங்கள் தற்போது குன்னூர் நகராட்சியில் அளித்து வருகின்றனர்.  அதற்கான விண்ணப்பங்களை அளிப்பதற்கு கடந்த 4 தினங்களாக வந்து சென்று வருகிறோம். இதனால் கடும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் புகார்கள் அளிக்க சென்றால் ஊழியர்கள் முறையான பதில் அளிப்பதில்லை என்று குற்றச்சாட்டும் தெரிவித்தனர்.

இந்நிலையில் குன்னூர் நகரில் சீல் வைக்கப்பட்ட கட்டிடங்களில் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து அதிகாரிகளிடம் கூறுகையில், கட்டிட உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் ஸ்டே வாங்கியுள்ளதாக எளிமையாக தெரிவித்தனர்.  எனவே குன்னூர் நகராட்சியில் நிரந்தர கமிஷனர் பணியமர்த்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>