×

ஆனைகட்டி பழங்குடியின கிராமத்தில் 21 பசுமை வீடுகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது

ஊட்டி, ஜன.7: ஆனைகட்டி  பகுதியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் கட்டப்பட்ட 21 பசுமை வீடுகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது, ஆனைகட்டி பகுதியில் பழங்குடியின மக்களின் கோரிக்கையினை நிறைவேற்றும் விதமாக தலா ரூ.2.10 லட்சம் மதிப்பில், கட்டப்பட்ட 21 பசுமை வீடுகள் திறந்து வைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. மேலும் 19 பயனாளிகளுக்கு புதிதாக வீடுகள் கட்டுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இப்பகுதியில் 8 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.  ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ், ரூ.22.18 லட்சம் மதிப்பில் குடிநீர் திட்டப் பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. 2019-20ம் நிதியாண்டில் மட்டும் நீலகிரி மாவட்டத்திற்கு 800 பசுமை வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இதில், பழங்குடியின மக்கள் பயன்பெறும் வகையில் 50 சதவீதம், அதாவது 400 பசுமை வீடுகளை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பழங்குடியின தாய்மார்கள், குழந்தைகள் குறைந்த எடையுடன் இருப்பதாக தெரிய வருகிறது. இரும்புச் சத்து உள்ளடக்கிய பொருட்கள் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும், சத்து மாத்திரைகள், சத்து மாவு மற்றும் சத்தான உணவு பொருட்கள் ஆகியவற்றை பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும், என்றார். தொடர்ந்து கூக்கல் ஊராட்சிக்குட்பட்ட சிறியூர் கிராமத்திலும், கடநாடு ஊராட்சிக்குட்பட்ட சொக்கநள்ளி கிராமத்திலும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் கட்டப்பட்டு வரும் பசுமை வீடுகளை ஆய்வு செய்தார்.  இவ்விழாவில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கெட்சி லீமா அமாலினி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

Tags : houses ,village ,Anaikatti ,
× RELATED நாகை மாவட்டம் கீழ்வேளூரில் அருகே தீ...