×

விவசாயிகள் புதிய தொழில் நுட்பங்களை அறிந்துகொள்ள உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் அறிமுகம்

கூடலூர், ஜன.7: கூடலூர் தோட்டக்கலை உதவி இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தோட்டக்கலை துறை அலுவலர்கள் கிராமங்களுக்கு நேரில் சென்று விவசாயிகளிடையே கூட்டங்கள் நடத்தி புதிய தொழில்நுட்பங்களை எடுத்துரைக்கவும் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் என்ற திட்டம் இந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது. அலுவலர்களுக்கு ஒதுக்கப்பட்ட கிராம ஊராட்சிகளில் 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் விவசாயிகள் மற்றும் உழவர் குழுக்களை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது. அலுவலர்கள் விவசாயிகளின் வயலில் தொழில்நுட்ப செயல் விளக்கங்கள் நடத்தியும் பயிற்சி அளித்தும், பள்ளிகள் மூலமும், சுற்றுலாக்கள் மூலமும் நவீன தொழில் நுட்பங்களையும், திட்டங்களின் செயல்பாடுகளையும் விவசாயிகளுக்கு தெரிவிப்பார்கள். ஒவ்வொரு கிராம ஊராட்சிகளும் குறைந்தபட்சம் 10 முன்னோடி விவசாயிகள் இதில் தேர்வு செய்து பல்வேறு நவீன வேளாண் தொழில்நுட்பங்கள் மற்றும் அரசு மானிய திட்டங்கள் குறித்த விளக்கங்களும் பயிற்சிகளும் உரிய இடைவெளியில் தொடர்ந்து வழங்கப்படும்.

பயிற்சி பெற்ற இந்த விவசாயிகள் தோட்டக்கலை துறைக்கும் விவசாயிகளுக்கும் பாலமாக இருந்து செயல்படுவார்கள். வட்டார அளவில் தோட்டக்கலை உதவி இயக்குனர் தலைமையில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானி, தோட்டக்கலை அலுவலர் அல்லது துணை தோட்டக்கலை அலுவலர்கள் உள்ளடக்கிய வட்டார தோட்டக்கலை விரிவாக்க குழு அமைக்கப்பட்டு பிரதி மாதம் கிராம ஊராட்சி வாரியாக பயணத் திட்டம் வகுத்து செயல்படுத்தப்படும்.
பயணத் திட்டம் ஆறு மாதத்திற்கு ஒரு முறை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1ம் தேதி மற்றும் அக்டோபர் 1ம் தேதிக்கு முன்பாக விவசாயிகள் அறிந்து கொள்ளும் வண்ணம் உழவன் செயலில் பதிவேற்றம் செய்யப்படும். கூடலூர் மற்றும் பந்தலூர் வட்டார விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுமாறு கூடலூர் தோட்டக்கலை உதவி இயக்குனர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags : Introduction ,
× RELATED பெண்களின் உடல்நலத்திற்காக...