சிக்கலான பிரசவசம் கண்டறிய தலைமை செவிலியர்களுக்கு பயிற்சி

கோவை, ஜன. 7: சிக்கலான பிரசவங்களை முன்கூட்டியே கண்டறிந்து உயர் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்வது தொடர்பாக தலைமை செவிலியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழகத்தில் தாய், சேய் இறப்பை கட்டுப்படுத்தும் விதமாக சிக்கலான பிரசவத்திற்கு வாய்ப்புள்ள கர்ப்பிணி பெண்களை கண்டறிந்து சிகிச்சை அளித்தல், கர்ப்பிணிகளுக்கு ஆலோசனை வழங்குதல் உள்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் தலைமை செவிலியர்களுக்கு சிக்கலான பிரசவங்களை கண்டறிதல், அவர்களை உடனடியாக உயர் மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்தல் தொடர்பான பயிற்சி அளிக்கப்படுகிறது. கோவை நகர்புற மற்றும் ஊரகப்பகுதியில் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மொத்தம் 360 நர்சுகள் உள்ளனர். இவர்களில், 40 பேர் என்ற அடிப்படையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தலைமை செவிலியர்களுக்கு ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள மாவட்ட சுகாதாரத்துறை அலுவலகத்தில் நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், சுகப்பிரசவத்திற்காக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணி பெண்களில் திடீரென கர்ப்பப்பை வாய் திறப்பதில் பிரச்னை, குழந்தை வெளியே வருவதில் தாமதம் உள்ளிட்ட சமயங்களில் துரிதமாக செயல்படுவது, உயர் சிகிச்சை மையங்களுக்கு பரிந்துரை செய்வது தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

Related Stories: