பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் ராணிபென்னூர் அருகே உள்ள காகோல் என்ற கிராமத்தைச் சேர்ந்த 30 வயதான ரூபா என்ற பெண் பிரசவத்திற்காக கடந்த செவ்வாய்க்கிழமை ஹாவேரி அரசு மருத்துவமனைக்கு சென்றார். ஆனால் பிரசவ வார்டு நிறைந்துவிட்டதால், படுக்கை வசதி எதுவும் இல்லை என்று கூறி ரூபாவை அட்மிட் செய்யாமல், பிரசவ வார்டின் வெளியே வராண்டாவில் அமரவைத்தனர்.
மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் என அனைவரும் அலட்சியம் காட்டி யாருமே கவனிக்காத நிலையில், கழிப்பறைக்கு செல்லும் வழியிலேயே ரூபாவிற்கு குழந்தை பிறந்து, குழந்தை கீழே தரையில் விழுந்ததில் ஏற்பட்ட காயத்தால் உயிரிழந்தது. பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அரசு மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகம், ஊழியர்களின் அலட்சியத்தால் தான் குழந்தை உயிரிழந்ததாக அந்த பெண்ணின் குடும்பத்தினரும் உறவினர்களும் குற்றம்சாட்டினர்.
இதுதொடர்பாக துறை ரீதியாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட தலைமை மருத்துவர் பி.ஆர்.ஹவனூர் தெரிவித்தார். காவல் துணை ஆணையர், மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரி, குழந்தை பாதுகாப்பு அதிகாரி, மகப்பேறு மருத்துவர் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
