மாற்று இடத்தில் அமையும் வரை நடமாடும் வாகனத்தில் அம்மா உணவகம் செயல்பட நடவடிக்கை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரி அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.  

அதே போல் திருவள்ளூரில் செயல்பட்டு வந்த தலைமை அரசு மருத்துவமனை  மருத்துவக் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டதால் பழைய கட்டிடங்களை இடித்து தற்போது அதே இடத்தில் புதிய கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தில் ஏற்கனவே செயல்பட்டு வந்த அம்மா உணவகம் அமைந்துள்ள பகுதியில் தற்போது கட்டிடப் பணிகள் நடைபெற்று வருவதால் அந்த பகுதியே சேறும் சகதியுமாக மாறியதுடன் பகல் நேரங்களில் மண் தூசி பறந்து உணவகத்திற்கு சாப்பிட வருபவர்கள் மீதும் தங்கள் மீதும் படிந்து பெரும் இன்னலுக்கு ஆளாகி வருவதாக அம்மா உணவக ஊழியர்கள் தெரிவித்தனர்.

மேலும் அம்மா உணவகம் இருக்கும் இடத்தை மாற்றி தரக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால்  அதன் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தினகரன் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. மாவட்ட கலெக்டர்  பா.பொன்னையா  அம்மா உணவகத்தை நேரில் ஆய்வு செய்தார். மாற்று இடத்தில் அம்மா உணவகம் அமைக்கும் வரை நடமாடும் வாகனம் மூலம் அம்மா உணவகத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். மேலும் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் உறவினர்கள்  வாகனங்களை மருத்துவமனை வாசலில் மாநில நெடுஞ்சாலையில் நிறுத்தி வைக்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு விபத்துக்களும் ஏற்படும் வாய்ப்பிருப்பதால் மருத்துவமனைக்கு எதிரில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்தவும் கலெக்டர் உத்தரவிட்டார்.

Related Stories: