×

கோயம்பேடு மார்க்கெட்டில் 16 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு : அதிகாரிகள் நடவடிக்கை

அண்ணாநகர், நவ.21: கோயம்பேடு மார்க்கெட்டில் 16 குழந்தை தொழிலாளர்களை அதிகாரிகள் மீட்டனர். கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள கடைகளில் சட்ட விரோதமாக சிறுவர், சிறுமியர் வேலை செய்து வருவதாக சைல்டு லேபர் இன்போஸ்மென்ட் துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் நேற்று முன்தினம் சைல்டு லேபர் இன்பொஸ்மென்ட் உதவி ஆணையர் பழனி தலைமையில், 25க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கோயம்பேடு காய்கறி, பூக்கள், பழம் மற்றும் உணவு தானிய மார்க்கெட்களில் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு பணியாற்றி வந்த 16 சிறுவர்களை மீட்டனர். அப்போது, கடை உரிமையாளர்கள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுசம்பந்தமாக அதிகாரிகள் கொடுத்த தகவலின்படி, கோயம்பேடு போலீசார் வந்து அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த வியாபாரிகளை சமாதானப்படுத்தினர். இதன்பின் மீட்கப்பட்ட 16 சிறுவர்களை கோயம்பேடு காவல்நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

இதுகுறித்து சைல்டு லேபர் இன்பொஸ்மென்ட் அதிகாரிகள் கூறுகையில், ‘‘கோயம்பேடு மார்க்கெட்டில் ஏராளமான சிறுவர்கள் வேலை செய்வதாக புகார்கள் வந்ததையடுத்து ஆய்வு மேற்கொண்டு, 16 சிறுவர்களை மீட்டுள்ளோம். அதிகாரிகளை பார்த்ததும் பெரும்பாலான சிறுவர்கள் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டனர். கூலி தொழிலாளர்கள் வேலை செய்யும் இடத்தில் சம்பளம் கொடுக்காமல் வேலை வாங்கினாலும் 8 மணி நேரத்துக்கு மேல் வேலை வாங்கினால் எங்களிடம் புகார் அளிக்கலாம். இதில் புகார் அளிக்கும் நபர்களின் பெயர், விவரம் பாதுகாக்கப்படும். சிறுவர்கள் பணியமர்த்தப்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்கலாம் என,’’ என்றனர். மீட்கப்பட்ட 16 சிறுவர்களும் ராயபுரம் பகுதியில் உள்ள அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

Tags : Koyambedu market ,Annanagar ,Child Labor Enforcement Department ,
× RELATED கனமழை காரணமாக சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.13.35 கோடி ஒதுக்கீடு