×

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

 

சென்னை: தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நேற்று லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும். தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, வருகிற 22-ம் தேதி வாக்கில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகிற 24-ம் தேதி வாக்கில், தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதற்கடுத்த 48 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலும் வலுப்பெறக்கூடும்.

இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரியலூர், கடலூர், கன்னியாகுமரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய 8 மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Tamil Nadu ,Meteorological Department ,Chennai ,Chennai Meteorological Department ,Lakshadweep ,Maldives ,
× RELATED பாஜக எம்எல்ஏக்கள் டெல்லி விரைய...