பொங்கலை முன்னிட்டு திருவில்லி.யில் வண்ணக்கோலப்ெபாடி தயாரிப்பு பணி தீவிரம்

திருவில்லிபுத்தூர், ஜன. 7: திருவில்லிபுத்தூரில் பொங்கலை முன்னிட்டு வண்ணக் கோலப்பொடி தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. தை மாதம் முழுவதும் தமிழகம் முழுவதும் உள்ள வீடுகளில் பெண்கள் வண்ணக்கோலங்கள் போட்டு அசத்துவது வழக்கம். அந்த வகையில் இன்னும் சில தினங்களில் தை மாதம் பிறக்க உள்ளது. இதற்காக பொதுமக்கள் தங்கள் வீட்டு வாசல்களில்  கோலம் போடுவதற்காக அதிக அளவு கலர் கோலப்பொடி  பாக்கெட்டுகளை வாங்கிச் செல்கின்றனர். இதற்காக திருவில்லிபுத்தூரில் கலர் கோலப்பொடி தயாரிக்கும் பணியில் கலர் கோலப்பொடி தயாரிப்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்காக இரவு, பகலாக இந்த பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திருவில்லிபுத்தூர் பேட்டை கடைத்தெருவில் கலர் பொடி தயாரிக்கும் சேகர் கூறுகையில், ``எங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து சுமார் 30 ஆண்டுக்கும் மேலாக கலர் கோலப்பொடி தயாரித்து வருகிறேன். 50 காசு பாக்கெட்டில் இருந்து 50 ரூபாய் பாக்கெட் வரை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். மாறி வரும் கால சூழலுக்கேற்ப காண்போர் கண்களைக் கவரும் வகையில் மினுமினுக்கும் கலர் கோலப் பொடிகளை, தயாரித்து விற்பனை செய்கிறோம். பொங்கல் பண்டிகை வருவதை முன்னிட்டு ஏராளமானோர் வாங்கி செல்வதால் கூடுதலாக கலர் கோலப்பொடியை தயாரித்து வருகிறோம்’’ என தெரிவித்தார்.

Related Stories:

>