×

திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில்

ராஜகோபுர தரிசனம்!

108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான ஸ்தலம்தான் திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில். மதுரைக்கு வடக்கே 12 கிலோ மீட்டர் தொலைவில் ஒத்தக்கடை அருகே அமைந்துள்ளது. இத்தலத்தில் காளமேகப் பெருமாள் மூலவராக அருள்பாலித்து வருகிறார். தாயார் மோஹனவல்லித் தாயார். பாற்கடலை கடைந்தெடுத்த அமுதத்தைப் பங்கிட்டுக் கொள்வதில் தேவர்கள், அசுரர்களுக்கிடையே சர்ச்சை உண்டானது. தங்களுக்கு உதவும்படி தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர்.

அவர்களின் வேண்டுதலை ஏற்றவர், மோகினி வேடத்தில் வந்து, அசுரர்களை மயங்க வைத்து தேவர்களுக்கு அமுதத்தைப் பரிமாறினார். பிற்காலத்தில் புலஸ்தியர் என்னும் முனிவர், மகாவிஷ்ணுவின் மோகினி வடிவத்தை தரிசிக்க வேண்டுமென விரும்பினார். சுவாமி அவருக்கு காட்சி தந்து, அவரின் வேண்டுகோள்படி பக்தர்களின் இதயத்தைக் கவரும் வகையில் மோகன வடிவத்துடன் இங்கே எழுந்தருளினார்.

காளமேகம் (கருமேகம்) நீரை தனக்குள் வைத்துக்கொண்டு, மக்களுக்கு மழையாக பெய்விப்பது போல் இத்தலத்தில் மகாவிஷ்ணு, மக்களுக்கு அருள் மழையினை தருவதால், ‘காளமேகப்பெருமாள்’ என்று அழைக்கப்படுகிறார். பஞ்சாயுதங்களுடன் காட்சி தரும் இவர், மார்பில் சாளக்ராம மாலை அணிந்து, வலது கையால் தன் திருவடியை காட்டியபடி இருக்கிறார். தன்னை வழிபடுபவர்களுக்கு உற்ற நண்பனாகவும், அவர்களது இறுதிக்காலத்திற்குப் பிறகு வழித்துணைவனாகவும் அருளுவதால், இவரை ‘ஆப்தன்’ என்றும் மக்கள் அழைக்கிறார்கள்.

இத்தலத்தில் கள்ளத்தூக்க கோலத்தில், பெருமாளுக்கு சந்நதி இருக்கிறது. தேவர்கள், தங்களைக் காக்க மகாவிஷ்ணுவிடம் முறையிடச் சென்றபோது அவர், ஏதுமறியாதவர் போல சயனித்திருந்தாராம். சுவாமியின் நித்திரைக்கு இடையூறு இன்றியும், அதே சமயம் தங்களது குறையையும் சொல்ல வேண்டும். அவரை எழுப்ப விரும்பாத அவர்கள், தேவி, பூதேவியிடம் தாங்கள் வந்த நோக்கத்தைச் சொல்லிவிட்டு திரும்பிவிட்டனர். தாயார்கள் இருவரும், சுவாமியினை மனதிற்குள் வேண்டிக்கொள்ளவே, மகாவிஷ்ணு கருணையுடன் கண் திறந்து, மோகினி வடிவில் சென்று தேவர்களுக்கு அருள்புரிந்தார். இந்த சந்நதிக்கு கீழே திருப்பாற்கடல் தீர்த்தம் இருப்பதாக ஐதீகம்.

வைகாசி பிரம்மோற்சவத்தில் காளமேகப்பெருமாள், ஆண்டாளின் மாலையை அணிந்தபடி காட்சி தருவார். பங்குனி உத்திரம், அதற்கு மறுநாள் நடக்கும் தெப்பத்திருவிழா, மார்கழி 28 ஆகிய நாட்களிலும் சுவாமியுடன், ஆண்டாளை தரிசிக்கலாம். வைகாசி பிரம்மோற்சவத்தின் எட்டாம் நாள், மாசி மகம் ஆகிய நாட்களில் மோகினி வடிவில் சுவாமி காட்சி தருவார். கோயில் சுமார் 7ம் நூற்றாண்டு காலப்பகுதியில் உருவானதாகக் கூறப்படுகிறது. பாண்டியர் காலத்தில் இத்தலம் வளர்ச்சியடைந்தது. பின்னர் சோழர், நாயக்கர் ஆட்சிக்காலங்களிலும் பெருமளவு திருத்தங்கள் மற்றும் விரிவாக்கங்கள் செய்யப்பட்டன.

கோயிலின் ராஜகோபுரத்தின் உயரம் சுமார் ஐந்து தளங்கள் கொண்டது. இதன் சிற்பங்கள் நாயக்கர் கால கலையையும், திவ்யதேசங்களின் தெய்வ வடிவங்களையும் பிரதிபலிக்கின்றன. கோபுரத்தின் ஒவ்வொரு தளத்திலும் விஷ்ணுவின் பல அவதாரங்கள், தேவதைகள், அசுரர்கள், புராணக் காட்சிகள் அழகாக செதுக்கப்பட்டுள்ளன. கம்பீரமான தூண்கள், மண்டபங்கள் நாயக்கர் காலத்தினை பிரதிபலிக்கின்றன.கோயிலின் முன்னுள்ள கோப்ர புஷ்கரிணி மிகப் புனிதமானது. பக்தர்கள் முதலில் இதில் நீராடி, பின்னர் காளமேகப் பெருமாளை தரிசிக்கின்றனர். புராணத்தின் படி, இங்கே நீராடுவதால் ‘மாயையிலிருந்து விடுதலை’ கிடைக்கும் என்பது ஐதீகம்.

திலகவதி

Tags : Thirumogoor Kalamegam Perumal Temple ,Rajagopuram ,Darshan ,Thirumogoor ,Kalamegam Perumal Temple ,Othakadai ,Madurai ,Kalamegam Perumal ,Mohanavalli ,
× RELATED கோபுரக் கலசங்களின் மகத்துவம் என்ன?