×

தேவதானப்பட்டியில் சாலையின் இருபுறம் ஆக்கிரமிப்பு வாகன ஓட்டிகள் அவதி

தேவதானப்பட்டி, ஜன.7: தேவதானப்பட்டியில் சாலையின் இருபுறமும் ஆக்கிரமித்து கடைகள் அமைத்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலை திண்டுக்கல், செம்பட்டி, வத்தலக்குண்டு, காட்ரோடு, தேவதானப்பட்டி, பெரியகுளம், தேனி, கம்பம் வழியாக குமுளி செல்கிறது. இப்படி செல்லும் சாலையில் மாவட்டத்தில் தொடக்க சாலையாக தேவதானப்பட்டி சாலை இருந்தது. தேவதானப்பட்டியில் ஏதாவது தகராறு என்றால் சாலை மறியலில் ஈடுபடும் போது நூற்றுக்கணக்கான வாகனங்கள் சாலையில் ஸ்தம்பித்து விடும். இந்நிலையில் திண்டுக்கல்-குமுளி சாலை விரிவுபடுத்தும் போது தேவதானப்பட்டியில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டது.  இதனால் கார்கள், வேன், சுற்றுலா வாகனம் உள்ளிட்டவை புறவழிச்சாலையில் செல்வதால் போக்குவரத்து சீரானது.

ஆனால் புறவழிச்சாலை  அமைக்கப்பட்ட பிறகு தேவதானப்பட்டியில் சினிமா தியேட்டரில் இருந்து ஆரம்ப சுகாதாரநிலையம் வரை சாலையின் இருபுறமும் அதிகளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. சரக்கு வாகனம், சுற்றுலா பேருந்து, கார்கள் உள்ளிட்ட வாகனங்கள்  புறவழிச்சாலையில் சென்றாலும்  தேவதானப்பட்டி ஊருக்குள் வரும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் அதிகளவில் சிரமப்படுகின்றன. அரிசிக்கடை பஸ் ஸ்டாப்பில் சாலையில் ஆட்டோக்கள் நிறுத்தப்படுகிறது. அங்கிருந்து தொடர்ந்து சாலையில் கடைகள் ஆக்கிரமிப்பு, போலீஸ் ஸ்டேசன் அருகே சாலையில் கடைகள், மாலை நேரங்களில் சாலையில் வைத்து பால் வியாபாரம், வைகை அணை பிரிவில் ஆட்டோக்களை சாலையில் நிறுத்துவது, சாலையோர கடைகள் என சாலை நெடுகில் ஆக்கிரமித்து கடைகள் உள்ளன.  ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேவதானப்பட்டி சினிமா தியேட்டரில் இருந்து ஆரம்ப சுகாதார நிலையம் வரை இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்தை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : motorists ,Devadanapatti ,road ,
× RELATED விவசாயிகளுக்கு பயிற்சி