×

கால்வாய் வசதி இல்லாததால் வீடுகளுக்குள் புகுந்த கழிவுநீர் தெருவில் நாற்று நட்ட மக்கள்

சாயல்குடி, ஜன.7: முதுகுளத்தூரில் நேற்று பெய்த மழைக்கு தெருப்பகுதியில் உள்ள தண்ணீர், கழிவுநீருடன் கலந்து வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். தெரு சேரும், சகதியுமாக கிடப்பதால் புதிய கழிவுநீர் கால்வாயுடன் கூடிய சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். முதுகுளத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மிதமான மழை பெய்தது. இதனால் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் பஜார், பேருந்து நிலையம், முக்கிய தெருக்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில் தண்ணீர் பெருகி ஓட வழியில்லாமல் தேங்கி நின்றதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

முதுகுளத்தூர் 2வது வார்டிலுள்ள காந்தி நகரில் சுமார் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாயில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் தெருவில் ஓடி வரும் தண்ணீர் ஓட வழியில்லாமல் வீடுகளுக்குள் கழிவுநீருடன் கலந்து புகுந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். இது குறித்து காந்திநகர் பொதுமக்கள் கூறும்போது, இப்பகுதி ஊரின் ஒதுக்குபுறத்தில் அமைந்துள்ளது. யூனியன் அலுவலகம், கால்நடை மருத்துவமனை மற்றும் பரமக்குடி செல்லும் சாலை பகுதிகளிலிருந்து ஓடி வரும் மழைத்தண்ணீர் முழுமையாக ஓட வழியில்லை. இதனால் மழைக்காலத்தில் வீடுகளை சுற்றி தேங்குவது தொடர் கதையாக உள்ளது. அப்போது குப்பை, பழைய துணி போன்ற அசுத்தமானவை தண்ணீரில் கலந்து வருகிறது.

உயரமான கழிவுநீர் கால்வாய் வசதியில்லாததால் மழைநீருடன், கழிவுநீர் கலந்து தாழ்வாக உள்ள வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் வீட்டு உபயோக பொருட்கள் நாசமாகி போயின. வீடுகளின் முன்பு தேங்கிய தண்ணீரை வெளியேற்றி வருகிறோம். வீடுகளை சுற்றிலும் கழிவுநீருடன், மழை தண்ணீர் தேங்கி கிடப்பதால் துர்நாற்றம் வீசி வருகிறது. குழந்தைகள் முதல் முதியவர்களை தொற்று நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது. மேலும் முறையான சாலை வசதியில்லாததால் மழை பெய்தால் சுமார் ஒரு வாரத்திற்கு சேரும், சகதியில் நடக்க வேண்டும். எனவே இத்தெருவில் உயரமான கழிவுநீர் கால்வாய் மற்றும் புதிய சாலை அமைக்க வேண்டும் என்றனர்.

Tags : street ,canal facilities ,
× RELATED நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற...