பயிர் இன்சூரன்ஸ் வழங்க கோரி தாலுகா அலுவலகம் முற்றுகை சப்.கலெக்டர் பேச்சுவார்த்தை தோல்வி

திருவாடானை, ஜன.7: திருவாடானையில் பயிர்இன்சூரன்ஸ் திட்டத்தில் முழு இழப்பீடு கேட்டு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வந்த நிலையில், போலீசாரின் கெடுபிடியால் முற்றுகை போராட்டமாக மாறியது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2018- 2019ம் ஆண்டு கடும் வறட்சியால் நெல்வி வசாயம் முழுவதுமாக பாதிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில் பிரதம மந்திரி காப்பீட்டு திட்டத்தில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீட்டு நிறுவனம் இழப்பீட்டு தொகையை வழங்கியது. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 117 வருவாய் கிராமங்கள் முழுவதும் பாதிக்கப்பட்டிருந்தது. திருவாடானை மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய இரண்டு தாலுகாவிலும் 31 வருவாய் கிராமங்கள் நெல் விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 25 சதவீதம் பாதிக்கப்பட்டதாக கூறி ரூ.5,600 மட்டும் வழங்கியது. இதனால் 100 சதவீதம் பாதிப்புக்கு 25 சதவீதம் இழப்பீடு வழங்குவது நியாயமற்ற செயல் என விவசாயிகள் போராட்டங்களை அறிவித்தனர். அதைத்தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் 100 சதவீதம் பாதிப்புக்கும் இழப்பீடு வழங்கப்படும் என உறுதி கொடுத்திருந்தனர். ஆனால் வாக்குறுதி அளித்தபடி இழப்பீடு வழங்காமல் 25 சதவீதம் மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

இதனால் திருவாடானை ஆர்.எஸ்.மங்கலம் வட்ட விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் விவசாயிகளை திரட்டி திருவாடானையில் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்தனர். காத்திருப்பு போராட்டத்திற்கு கலந்து கொள்ள வரும் விவசாயிகள் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டு நிழலுக்காக பந்தல் அமைத்தனர். இதனை போலீசார் அனுமதிக்காமல் பந்தலை அகற்றினர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் பெண்கள் உட்பட ஏராளமானோர் திரண்டு வந்து திருவாடானை தாலுகா ஆபிசை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். காத்திருப்பு போராட்டம் முற்றுகையாக மாறியுள்ளது. இந்த போராட்டம் பற்றி தகவல் அறிந்த ராமநாதபுரம் சப்-கலெக்டர் சுகபுத்ரா, தாசில்தார் மாதவ,ன் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் அரசு தரப்பில் முழு இழப்பீடு வழங்க அழுத்தம் கொடுப்பதாக தெரிவித்தார். அதற்கு விவசாயிகள் முழுமையான இழப்பீடு வழங்கினால் மட்டுமே கலைந்து கொள்வோம் என தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>