×

வரும் சட்டமன்ற தேர்தலுக்காக வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் கலெக்டர் தகவல்

காரைக்குடி, ஜன.7: சட்டமன்ற தேர்தலுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு முதற்கட்ட பரிசோதனையும் முடிந்துள்ளது என கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்தார். காரைக்குடி அழகப்பா அரசு பொறியியல் கல்லூரி மற்றும் அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் அறைகளை கலெக்டர் மதுசூதன்ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மையம் குறித்து முதல் கட்ட ஆய்வு செய்யப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலின் போது வாக்கு எண்ணிக்கை மையத்திற்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்படும் அறை, வாக்கு எண்ணிக்கை மையங்கள் மற்றும் பாதுகாப்பு தன்மைகள் குறித்து எஸ்.பி ரோஹித்நாதன் ராஜகோபால் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுடன் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட 4 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்கள் இந்த வளாகத்தில் செயல்படும். தேர்தல் ஆணைய அறிவுரைப்படி முதல் கட்ட ஆய்வு செய்யப்பட்டு வரைபடம் தயாரிக்கப்பட்டு அறிக்கை அனுப்படும்.
ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் அறை மற்றும் வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான அறைகள் குறித்து பொறியாளர்களுடன் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. தவிர பாதுகாப்பு தன்மை குறித்தும் பார்வையிடப்பட்டுள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலுக்கு தேவையான 3442 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1,887 வாக்கு எண்ணிக்கை இயந்திரங்கள், 2,054 வாக்குப்பதிவு உறுதி செய்யும் இயந்திரங்கள் முதல்கட்ட பரிசோதனை முடிந்து தயார் நிலையில் உள்ளன. தேர்தல் ஆணைய அறிவுரைப்படி வாக்கு எண்ணிக்கை மையத்திற்கான உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும் என்றார். ஆய்வின் போது வருவாய் கோட்டாட்யர்கள் சுரேந்திரன், முத்துக்கலுவன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சிந்து, பிஆர்ஓ பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : elections ,Assembly ,
× RELATED 2026-ம் ஆண்டு புதிய கட்சியை தொடங்க உள்ளதாக நடிகர் விஷால் அறிவிப்பு!