×

நோய் தாக்காமல் இருக்க விதை பரிசோதனை அவசியம் வேளாண்மை அதிகாரிகள் வேண்டுகோள்

பரமக்குடி, ஜன.7:  விதையின் ஈரப்பதத்தை பொறுத்து விதையின் ஆயுள் நிர்ணயிக்கப்படுவதால், விவசாயிகள் தங்களுடைய விதைகளை பரிசோதனை செய்து கொள்ளுமாறு மாவட்ட விதை பரிசோதனை அலுவலர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது விவசாய பணிகள் தீவிரம் அடைந்துள்ள நிலையில், மாவட்ட விதை பண்ணை விவசாயிகள், விதை சுத்திகரிப்பு செய்வதற்கு முன்பாக, அவசியம் ஈரப்பதம் மற்றும் ரகத்தூய்மை அறிந்து கொள்ள வேண்டும். விதைகளின் ஈரப்பதத்தை பொறுத்து, விதையின் ஆயுள்காலம் நிர்ணயிக்கப்படுகிறது. அதன் ஈரத்தன்மையானது அதிகமாகவோ, குறைவாகவோ இருக்கக் கூடாது. சரியான ஈரப்பதத்தில் உள்ள விதைகளை பூச்சி நோய் தாக்குதல் இன்றி நீண்ட நாட்கள் சேமித்து வைக்கலாம்.

விதைகளில் பிறரக விதைகள் குறிப்பிட்ட அளவிற்கு கூடுதலாக இருக்கக் கூடாது. அவ்வாறு, பிறரக விதைகள் அதிகளவில் கலந்து இருக்குமானால், அவற்றின் வயது வித்தியாசம் காரணமாக வெவ்வேறு காலங்களில் முதிர்ச்சியடையும். இதனால், ஒரே சமயத்தில் அறுவடை செய்ய இயலாது. மிக முக்கியமாக, 5 கலப்பு அதிகம் உள்ள விதைகளை அடுத்த பருவத்திற்கு விதைப்பதற்கு பயன்படுத்த இயலாது. மேலும் கலப்பு காரணமாக அவற்றை நல்ல விலைக்கு விற்பனை செய்ய முடியாது. எனவே, விவசாயிகள் தங்கள் விதையின் ஈரப்பதம் மற்றும் பிறரக விதைகள் நிர்ணயிக்கப்பட்ட அளவில் உள்ளதா, என்பதை அறிந்து கொண்ட பின்பு விதைகளை சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பவேண்டும்.
இதை பரிசோதனை செய்ய ஒரு விதை மாதிரிக்கு ரூ.30 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. எனவே, விவசாயிகள் விதை மாதிரிக்கான பயிர், ரகம், குவியல் எண் ஆகிய விவரங்களுடன் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விதை மாதிரிகளை பரமக்குடி விதை பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பினால், விதை பரிசோதனை முடிவுகள் தங்களது முகவரிக்கு தபால் மூலம் தெரிவிக்கப்படும், என விதை பரிசோதனை அலுவலர் சிங்கார லீனா, வேளாண்மை அலுவலர் முருகேஸ்வரி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Tags : Seed testing ,spread ,
× RELATED விவசாயிகள், விதை விற்பனையாளர்கள் விதை பரிசோதனை செய்து கொள்ள அழைப்பு