×

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் கலெக்டர் தகவல்

மதுரை, ஜன. 7: மதுரை கலெக்டர் அன்பழகன் வெளியிட்ட அறிக்கை: மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் முறையே வரும் 14, 15, 16 ஆகிய தேதிகளில் ஜல்லிக்கட்டு நடக்க உள்ளது. இதில் கலந்து கொள்ளவுள்ள காளைகள், மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள், உதவியாளர்களுக்கு பதிவு, ஆர்டி- பிசிஆர் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படும் நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி அவனியாபுரம், பாலமேட்டில் நடக்கும் ஜல்லிக்கட்டுகளில் கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்கள் வரும் ஜன.9 முதல் அந்தந்த ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியிலும், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்பவர்கள் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியிலும் பதிவு செய்து கொள்ளலாம். ஜல்லிக்கட்டு காளைகளுக்கு ஜன.11ம் தேதி பதிவு செய்து கொள்ளலாம்.

இதேபோல் மாடிபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள், உதவியாளர்களுக்கான ஆர்.டி- பிசிஆர் பரிசோதனை அவனியாபுரத்தில் ஜன.10,11 தேதிகளிலும், பாலமேட்டில் ஜன.11, 12ம் தேதிகளிலும், அலங்காநல்லூரில் ஜன.12,13ம் தேதிகளிலும் மேற்கொள்ளப்படும். இதுதவிர அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள கொரோனா மையங்களில் பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழ் வாங்கினால்தான், அடையாள அட்டை வழங்கி ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.
பதிவு செய்ய வருபவர்கள் ஆதார் அட்டைகள், 3 பாஸ்போட் புகைப்படங்களை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். மேலும் பார்வையாளர்கள், மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள், உதவியாளர்கள், அலுவலர்கள், விழா ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியை பின்பற்றி ஜல்லிக்கட்டு சிறப்பாக நடக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : Corona Negative ,
× RELATED ராஜஸ்தானில் ஒமிக்ரான் தொற்று...