×

மயானத்திற்கு பாதை கோரி இறந்தவர் உடலுடன் காத்திருப்பு போராட்டம் சேடபட்டி அருகே பரபரப்பு

பேரையூர், ஜன. 7: சேடபட்டி அருகே மயானத்திற்கு பாதை வசதி கோரி இறந்தவர் உடலுடன் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பேரையூர் தாலுகா, சேடபட்டி ஒன்றியத்திற்குட்பட்டது எ.கிருஷ்ணாபுரம், இவ்வூரில் ஆதிதிராவிடர்களுக்கு விவசாய நிலங்களுக்கு நடுவே மயானம் உள்ளது. நிலங்கள் வழியாகத்தான் இறந்தவர்களின் உடல்களை கொண்டு செல்வது வழக்கம். இதனால் இப்பகுதி மக்கள் மயான பாதை கேட்டு அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்ததாகவும், ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று எ.கிருஷ்ணாபுரம் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் மூதாட்டி ஒருவர் வயது முதிர்வால் இறந்து விட்டார். தற்போது விவசாய நிலங்களில் நெல் பயிரிடப்பட்டிருந்தது.

இதனால் வயல்களுக்குள் உடலை கொண்டு செல்ல முடியாது என்றும், மயானத்திற்கு பாதை வழங்காத ஊராட்சி நிர்வாகம், அதிகாரிகள் உடலை தூக்கி சென்று அடக்கம் செய்யட்டும் எனக்கூறியும் இப்பகுதி மக்கள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்ததும் விஏஓ குருசாமி, யூனியன் ஆணையாளர் கண்ணன், ஊராட்சி மன்ற தலைவர் பத்ரகாளிமணி உள்ளிட்டோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினனர். மயானத்திற்கு பாதை கொடுக்காமல் உடலை எடுப்பதில்லை எனக்கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து விஏஓ இப்பிரச்னை குறித்து தாசில்தார் சாந்தியிடம் கூறினார். பின்னர் தாசில்தார் ஒப்புதலின்படி சின்னக்கட்டளை- ராமநாதபுரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் தற்காலிகமாக உடலை புதைத்து கொள்ளலாம் என தெரிவித்தனர். இதற்கு பொதுமக்கள் சம்மதம் தெரிவிக்கவே, ஜேசிபி இயந்திரம் மூலம் அப்பகுதியில் உள்ள செடி, செடிகளை அப்புறப்படுத்தி உடலை புதைக்க ஏற்பாடு செய்தனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சில மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : cemetery ,
× RELATED வேஷ்டியை கழற்றி ரகளை அமமுக ஒன்றிய செயலர் கைது