நீட் தேர்வில் முதலிடம் மாணவிக்கு பாராட்டு

திண்டுக்கல், ஜன.7: திண்டுக்கல் மாவட்டத்தில் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று மருத்துவ கல்லூரியில் இடம் பெற்ற மாணவிக்கு பாராட்டு விழா நடந்தது. திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்த மாணவி உமாமகேஸ்வரி. இவர் நீட் தேர்வில் திண்டுக்கல் மாவட்டத்தில் அதிக மதிப்பெண் பெற்றார். இவருக்கு அரசின் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் அடிப்படையில் கரூர் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. இவர் எட்டாம் வகுப்பு வரை படித்த   சிங்காரக்கோட்டை ஊராட்சி நடுநிலை பள்ளி சார்பில் பாராட்டு விழா நடந்தது. இதில் முதன்மைக் கல்வி அலுவலர்  செந்தில் வேல்முருகன், மாவட்ட கல்வி அலுவலர் விஜயேந்திரன், பிரைமரி பள்ளிகளின் இயக்குனர் ஜெயராணி, சிங்காரகோட்டை ஊராட்சி நடுநிலை பள்ளி தலைமையாசிரியர் கனகராஜ் உட்பட பலர் சால்வை அணிவித்து பாராட்டி வாழ்த்து கேடயம் வழங்கினர். இது குறித்து மாணவி கூறுகையில்,  எனது பெற்றோர் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்துபவர்கள். எனது மருத்துவ கனவை அரசின் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு பூர்த்தி செய்துள்ளது. இது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. நான் மருத்துவம் படித்து ஏழைகளுக்கு சேவை செய்வேன் என்றார்.

Related Stories:

>