திருவாரூர் ஆயுதப்படை மைதானத்தில் பறிமுதல் வாகனங்கள் நாளை ஏலம்

திருவாரூர், ஜன.7: திருவாரூர் மாவட்டத்தில் மதுவிலக்கு சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்ட 49 வாகனங்கள் நாளை (8ம் தேதி) பொது ஏலத்தில் விடப்படுவதாக கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் பயன்படுத்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட நான்கு சக்கர வாகனம் 30, இரண்டு சக்கர வாகனம் 146 மற்றும் 3 சக்கர வாகனம் ஒன்று என மொத்தம் 177 வாகனங்களுக்கான பொது ஏலமானது கடந்த மாதம் 3ம் தேதி நடைபெற்றது. இதனையொட்டி அன்றைய தினம் ஏலம் போகாத 22 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 27 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 49 வாகனங்களுக்கு மீண்டும் பொது ஏலமானது நாளை (8ம் தேதி) நடைபெறுகிறது.

திருவாரூர் ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தப்பட்டுள்ள இந்த வாகனங்கள் அனைத்தும் அன்று காலை 11 மணி அளவில் பொது ஏலத்தில் விடப்படுவதால் அதற்கு முன்னதாக ஏலம் எடுப்பவர்கள் வாகனங்களை பார்வையிட்டு ஏலத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் வாகனங்களை ஏலம் எடுக்க வருபவர்கள் தங்களது ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் முன்பணம் தொகையாக ரூ.ஆயிரம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஏலம் எடுக்காத பட்சத்தில் இந்த முன்பணம் தொகை ரூ.ஆயிரம் திரும்ப அளிக்கப்படும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>