சமூகநலத்துறை பணியாளர்கள் பெற்றோரிடத்தில் ஆண், பெண் குழந்தைகள் சமம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும்

அரியலூர், ஜன.7: அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட சமூக நலத்துறையின் சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பணியாளர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சியினை கலெக்டர் ரத்னா துவக்கி வைத்தார்.

இப்பயிற்சியில், சட்டப்பணிகள் ஆணைக்குழு சிவில் நீதிபதி அல்லி மற்றும் மாவட்ட எஸ்.பி., சீனிவாசன் முன்னிலை வகித்தனர். இப்பயிற்சியில், பெண் குழந்தைகள் பாதுகாக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மற்றும் சட்ட உதவிகள், குழந்தை பாலின விகிதம் குறைவதால் ஏற்படும் பாதிப்புகள், குழந்தை பாலின விகிதம், பிறப்பு பாலின விகிதம் அதிகரிப்பதற்கான வழிமுறைகள் மற்றும் பெண்களுக்கான அரசு வழங்கும் மருத்துவ நலத்திட்டங்கள், இத்திட்டத்தை அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் ஒருங்கிணைத்து செயல்படுத்துவது குறித்தும் பயிற்யாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பயிற்சி வகுப்பை துவக்கி வைத்து கலெக்டர் ரத்னா பேசுகையில், அரியலூர் மாவட்டத்தில் குறைந்து காணப்படும் பெண் குழந்தை விகிதத்தை அதிகரிக்கும் வகையிலும், கிராம அளவில் மக்கள் மனதில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து சுகாதாரம், கல்வித்துறை, சமூக நலத்துறை, மகளிர் திட்டம் ஆகிய துறைகளின் பணியாளர்கள் பயிற்சியாளர்களாக தேர்வு செய்து ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியாளர்கள் அனைவரும் கிராம, கிராமமாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி, கர்ப்பிணிகளை பரிசோதனை செய்து, கருகலைப்பை முற்றிலுமாக தடுத்திடும் வகையில் அறிவுரை வழங்க வேண்டும். கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பது தெரிவிப்பது சட்டப்படி குற்றமாகும். மேலும் ஸ்கேன் மையங்களை கண்காணித்து, கருவில் வளரும் குழந்தை பாலினம் பரிசோதனைகள் மேற்கொள்ளும் ஸ்கேன் மையங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், கிராமங்களில் பெற்றோர்களிடையே ஆண், பெண் குழந்தைகள் சமம் என்ற விழிப்புணர்வை பணியாளர்கள் ஏற்படுத்திட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து விழிப்புணர்வு உறுதிமொழியை கலெக்டர் தலைமையில் பணியாளர்கள் அனைவரும் எடுத்துக்கொண்டனர். விழிப்புணர்வு வாசகத்தை அஞ்சல் அட்டைகளில் அச்சிட ரூ.2 லட்சத்திற்கான காசோலையினை கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>