×

குளித்தலை காவேரி நகர் பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் மக்கள் கடும் அவதி

குளித்தலை, ஜன.7: கரூர் மாவட்டம் குளித்தலை நகர மையப்பகுதியில் உள்ளது காவேரி நகர். இப்பகுதியில் வங்கிகள் தனியார் மருத்துவமனைகள் அரசு அண்ணா சமுதாய மன்றம் மாணவர் விடுதி, சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அலுவலகம், நூலகம், தினசரி காய்கறிசந்தை, உழவர்சந்தை ஆகியவை செயல்பட்டு வருகிறது. இதனால் தினமும் ஏராளமானோர் காவேரி நகர் பகுதியில் இருசக்கர வாகனத்திலும், நடந்தும் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள காவேரி நகர் பகுதியில் மாடுகளை கூட்டம் கூட்டமாக மாட்டின் உரிமையாளர்கள் காலையில் அவிழ்த்து விட்டால் இரவு வரை கண்டு கொள்வதில்லை. இதனால் காவேரி நகர் பகுதியில் உள்ள சாலையில் மாடுகள் படுத்துக்கொண்டு எழுந்திருப்பது இல்லை. இதனால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் தடுமாறி செல்கிறது.

மேலும் இருசக்கர வாகனத்தில் வருவோர் கடந்து செல்லும் போது அச்சத்துடன் கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலையில் இருந்து வருகிறது. காய்கறி சந்தைக்கு நடந்து செல்லும் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் அச்சத்துடன் நடந்து செல்கின்றனர். மேலும் இரவு நேரங்களில் இதே சாலையில் தெரு விளக்கு இல்லாத இடங்களில் மாடுகள் சாலையில் படுத்துக் கிடப்பதால் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் தெரியாமல் நேரடியாக மோதும் நிலை ஏற்பட்டு ஒரு சில நேரத்தில் விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் காவேரி நகர் பகுதியில் ஏராளமான தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக உலா வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் கடந்து செல்கின்றனர் ஆகவே குளித்தலை நகராட்சி சுகாதார ஆய்வாளர் துரித நடவடிக்கை எடுத்து குளித்தலை நகரத்தில் சுற்றித்திரிந்து சாலையில் விபத்து ஏற்படுத்தும் வகையில் படுத்து கிடக்கும் மாடுகளையும், தெருநாய்களையும் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,area ,Kulithalai ,Kaveri Nagar ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...