நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து மூன்று விசைப்படகுகளில் கடந்த மாதம் 30, 31ம் தேதி சென்ற 31 மீனவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாககூறி அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். 3 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில், இலங்கை பருத்தித்துறை நீதிமன்றத்தில் நாகப்பட்டினம் மீனவர்கள் கைது தொடர்பான வழக்கு நேற்று (17ம்தேதி) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மீண்டும் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க நுழைந்தால் கடுங்காவல் தண்டனை வழங்கப்படும் என எச்சரித்து, 31 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். இதையடுத்து நாகப்பட்டினம் மீனவர்கள் 31 பேரும் விரைவில் நாடு திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
