- அமைச்சர்
- சென்னை
- மு.R.K பன்னீர் செல்வம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சேவை மையங்கள்
- விவசாயிகள் நலத்துறை அமைச்சர்
சென்னை: தமிழ்நாட்டில் வேளாண் பட்டம் மற்றும் பட்டயம் பெற்ற இளைஞர்கள் சுயதொழில் தொடங்கி பயன்பெறும் வகையில் ‘முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள்’ அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதுகுறித்து வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பயனாளி இளைஞர்களுக்கு உழவர் நல சேவை மையங்களை திறம்பட நிர்வகிக்கும் பொருட்டு 15 நாட்களுக்கு மாவட்டங்களில் உள்ள உழவர் பயிற்சி நிலையம் / வேளாண்மை அறிவியல் நிலையங்களில் உரிய பயிற்சிகள் அளிக்கப்படுவதுடன், ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலான மதிப்பீட்டில் உழவர் நல சேவை மையங்கள் முறையே 300 சதுர அடி மற்றும் 600 சதுர அடி கார்பெட் பரப்பில் அமைத்திட 30 சதவீத மானியமாக ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை இரண்டு தவணைகளாக வழங்கப்படும்.
இந்த மையங்களில் உழவர்களுக்கு தேவையான விதைகள், உரங்கள் உள்ளிட்ட இடுபொருட்கள் விற்பனை செய்யப்படுவதோடு, வேளாண் உற்பத்தியை பெருக்கவும். பயிர்களில் ஏற்படும் பூச்சி, நோய் மேலாண்மைக்கு தேவையான ஆலோசனைகளும் வழங்கப்படும். மேலும், சிறிய இயந்திரங்கள் மற்றும் அதன்மூலம் இயங்கக்கூடிய வேளாண் இயந்திரங்கள், கருவிகள் போன்றவை அரசு நிர்ணயித்த வாடகையிலும், டிரோன்கள் மூலம் பயிர்பாதுகாப்பு மருந்துகள் தெளிப்பு சேவைகளும் வழங்கப்படுவதுடன், நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டுதல் குறித்த ஆலோசனைகளும் வழங்கப்படும். விரிவான திட்ட அறிக்கை தயாரித்தல், வங்கிகளில் கடன் பெறுதல் போன்ற நடைமுறைகள் குறித்த வழிகாட்டுதல்களை வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம், வேளாண்மை பொறியியல் ஆகிய துறை அலுவலர்கள் இளைஞர்களுக்கு வழங்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் அதிக அளவில் வேளாண் பட்டம் / பட்டயம் படித்த 20 முதல் 45 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் இணைய வேண்டும். ஆர்வமுள்ள இளைஞர்கள் விரிவான திட்ட அறிக்கையுடன் வங்கிகளில் கடன் ஒப்புதல் பெற்று https://www.tnagrisnet.tn.gov.in/KaviaDP/register எனும் இணையதள முகவரியில் விண்ணப்பித்து பயனடையலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
