சென்னை : வேளச்சேரி-பரங்கிமலை இடையிலான பறக்கும் ரயில் சேவை வரும் ஜனவரி முதல் தொடங்க உள்ளதாக ரயில்வே அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை – வேளச்சேரி மேம்பால பாதையில், தினமும் 100 சர்வீஸ் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. வேளச்சேரி – பரங்கிமலை 5 கி.மீ., துாரம் இணைக்கும் வகையில், மேம்பால ரயில் பாதை திட்டப்பணி, 2008ம் ஆண்டில் துவங்கப்பட்டது. ஆனால், ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகரில் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்னையால் பணிகள் முடங்கின.ஒரு வழியாக இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு, இந்த தடத்தில் 2022ம் ஆண்டுக்கு பின் மீண்டும் பணிகள் நடந்தன.
கடந்த 17 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த வந்த மேம்பால ரயில் இணைப்பு பணி முடிவுக்கு வந்தது. இதற்கிடையே, வேளச்சேரியில் இருந்து பரங்கிமலைக்கு, 10 பெட்டிகளுடன் சரக்கு ரயில் இயக்கி சோதனை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தலைமையிலான கட்டாய சோதனை ஓட்டமும் தொழில்நுட்ப ஆய்வும் டிசம்பர் மாதத்தில் நடைபெறும். சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்தவுடன், ஜனவரியிலேயே ரயில் சேவை அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படும் என்று ரயில்வே துறை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ரயில் சேவை தொடங்கினால், வேளச்சேரி, ஆதம்பாக்கம், தில்லைநகர, கங்காநதர் பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் பயன்பெற உள்ளனர்.
