×

போக்குவரத்து கழக பணியாளர்களுடன் ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தை: தொழிற்சங்கங்கள் பங்கேற்பு

தாம்பரம்: தமிழ்நாடு அரசு அனைத்து போக்குவரத்து கழக பணியாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை குரோம்பேட்டையில் நேற்று நடந்தது. தமிழ்நாடு அரசு அனைத்து போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தம், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஒப்பந்தத்தில் பணியாளர்களின் ஊதியம், அகவிலைப்படி, இதர படிகள் மற்றும் பல்வேறு சலுகைகள் குறித்து விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படுகின்றன. 13வது ஊதிய ஒப்பந்தம் 31.8.2019 உடன் நிறைவடைந்தது. 2019ம் ஆண்டு செப்டம்பரில் 14வது ஊதிய ஒப்பந்தம் பேசி முடித்து இருந்தால், தொழிலாளர்களுக்கு ரூ.2000 முதல் ரூ.5000 வரை சம்பள உயர்வு கிடைத்து இருக்கும். இந்த நிலையில் அரசின் சார்பில் பேச்சுவார்த்தைக்கு அழைக்காததாலும், கொரோனா பொதுமுடக்கம் காரணமாகவும் பேச்சுவார்த்தை தாமதமானது.

அரசின் தரப்பில் பேச்சுவார்த்தைக்கு அழைத்து 14வது ஊதியக்குழுவில் பேச்சுவார்த்தை நடத்த கோரி கடந்த டிசம்பர் 1ம் தேதி தொமுச, சி.ஐ.டியு, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் பல்லவன் இல்லத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது, டிசம்பர் 17ம் தேதி வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அரசு பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டு அதற்கான தேதியை அறிவித்தது. அதன்படி, குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து பயிற்சி நிலையத்தில் போக்குவரத்து துறை செயலர் சி.சமயமூர்த்தி தலைமையில் 14வது ஊதியக்குழு ஒப்பந்தம் குறித்த முதற்கட்ட பேச்சு வார்த்தை நேற்று நடந்தது. 8 அரசு போக்குவரத்து கழகங்களை சேர்ந்த ஒரு லட்சத்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, பல்வேறு படிகள், பணி உயர்வு உள்ளிட்டவை குறித்து இந்த ஒப்பந்த குழுவில் விவாதிக்கப்பட்டன. இக்கூட்டத்தில், பங்கேற்கும் பொருட்டு, 67 பேரவை தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

Tags : Transport Corporation ,
× RELATED தேர்தல் நடத்தை விதிமுறைகளால் பஸ்,...