கள்ளக்காதலனுடன் இருந்ததால் ஆத்திரம் தலையணையால் முகத்தில் அழுத்தி சகோதரி கொலை: போலீசில் தம்பி சரண்

திருவொற்றியூர்: எர்ணாவூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் விஜயகுமார், கூலித்தொழிலாளி. இவரது மனைவி சுப்புலட்சுமி (29). இவர்களுக்கு 10 வயதில் மகள் உள்ளார். மனைவியின் நடத்தை சரியில்லாததால் அவரை பிரிந்து, விஜயகுமார் தனது மகளுடன் வண்ணாரப்பேட்டையில் உள்ள தாய் வீட்டில் வசித்து வசிக்கிறார். சுப்புலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சுப்புலட்சுமியின் தம்பி பிரதாப் (26), அக்காவை பார்க்க எர்ணாவூர் சுனாமி குடியிருப்புக்கு சென்றுள்ளார். வீட்டின் கதவை தட்டியபோது, நீண்ட நேரம் கழித்து சுப்புலட்சுமி கதவை திறந்துள்ளார். மேலும், பதற்றமாக இருந்துள்ளார். இதுபற்றி பிரதாப் கேட்டபோது, மழுப்பலாக சுப்புலட்சுமி பதிலளித்துள்ளார். சந்தேகமடைந்த பிரதாப், அங்குமிங்கும் நோட்டமிட்டபோது கட்டிலுக்கு அடியில் அதே பகுதியை சேர்ந்த ஜானகிராமன் (38) பதுங்கி இருப்பது தெரிந்தது.

இதனால், ஆத்திரமடைந்த பிரதாப், ஜானகிராமனை சரமாரியாக தாக்கி, ஒரு அறையில் வைத்து பூட்டியுள்ளார். தடுக்க முயன்ற சுப்புலட்சுமியையும் சரமாரியாக தாக்கியதோடு, கட்டிலில் தள்ளி, தலையணையை முகத்தில் அழுத்தியுள்ளார். இதில், அவர் மூச்சுத்திணறி இறந்தார். இதையடுத்து, அங்கிருந்து எண்ணூர் காவல் நிலையம் சென்று சரணடைந்தார். போலீசார், சுப்புலட்சுமியின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அவரது வீட்டின் அறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்த ஜானகிராமனை மீட்டு காவல் நிலையம் அழைத்து சென்றனர். விசாரணையில், சுப்புலட்சுமிக்குக்கும், ஜானகிராமனுக்கும் பல நாட்களாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. கணவர் விஜயகுமார் வீட்டில் இல்லாத நேரத்தில் சுப்புலட்சுமி வீட்டிற்கு சென்று ஜானகிராமன் உல்லாசமாக இருந்துள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், கணவர் விஜயகுமாரிடம் இதுபற்றி தெரிவித்துள்ளனர்.

விஜயகுமார் பலமுறை சுப்புலட்சுமியை எச்சரித்தும் அவர்கள் கள்ளக்காதல் தொடர்ந்தது. இதனால், விஜயகுமார் மகளை அழைத்துக்கொண்டு தனியாக சென்றுள்ளார். இதையடுத்து, சுப்புலட்சுமி கள்ளக்காதலை தடையின்றி தொடர்ந்துள்ளார். இதை நேற்று நேரில் பார்த்த சுப்புலட்சுமியின் தம்பி பிரதாப், சகோதரியை கொலை செய்தது தெரியவந்தது. மேலும் விசாரணையில், கள்ளக்காதலன் ஜானகிராமன், சுப்புலட்சுமியின் சித்தி மகன் என்பதும், தம்பி முறை கொண்ட நபருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டதால் சகோதரியை பிரதாப் கொன்றதும் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>