டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் மாணவர்கள் ஓட்டிவந்த கார் மோதி சிக்னல் கம்பம் முறிந்து விழுந்தது: காயங்களுடன் தப்பினர்

சென்னை: டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் மாணவர்கள் ஓட்டிவந்த கார் மோதியதில் சிக்னல் கம்பம் முறிந்து விழுந்தது. இதில், மாணவர்கள் காயங்களுடன் உயிர்தப்பினர். மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் நேற்று அதிகாலை 3 மணிக்கு அதிவேகமாக ஒரு கார் வந்தது. அப்போது மழை பெய்து கொண்டிருந்ததால் கார் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து நடேசன் சாலை சந்திப்பில் உள்ள சிக்னல் கம்பம் மீது பயங்கரமாக மோதியது. இதில், சிக்னல் கம்பம் முறிந்து விழுந்தது. காரின் முன்பக்கம் முற்றிலும் நொறுங்கியது. காரில் இருந்த ‘ஏர் பேக்’ திறந்ததால் உள்ளே இருந்த 2 வாலிபர்கள் காயங்களுடன் உயிர் தப்பினர்.

இதை பார்த்த வாகன ஓட்டிகள், அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார் விரைந்து வந்து, 2 வாலிபர்களையும் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், பாடியை சேர்ந்த சரவணன் (24), அவரது நண்பர் சந்தோஷ் என்பது தெரியவந்தது. சட்டக் கல்லூரி மாணவர்களான இவர்கள் நேற்று முன்தினம் இரவு ஓட்டலில் விருந்து முடித்துவிட்டு, அதிகாலை வீட்டிற்கு காரில் திரும்பியபோது விபத்தில் சிக்கியது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>