திருச்சி தமிழகத்தில் எத்தனை அணிகள் வந்தாலும் திமுகதான் வெற்றிபெறும்

திருச்சி, ஜன.6: திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மக்கள் கிராம சபை கூட்டம் நேற்று காலை நடந்தது. இதில் 39, 39ஏ, 40,50,50ஏ வார்டு பகுதி மக்கள் கலந்து கொண்டனர். இதில் திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு கலந்து கொண்டு பேசுகையில், திமுக ஆட்சி அமைந்த 3 மாதத்தில் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்றார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி : பொங்கல் பரிசு தொகுப்பிற்காக சர்க்கரை கார்டுகளை அரிசி கார்டுகளாக அவர்களாகவே மாற்றி பணம் எடுத்து கொள்வதாக குற்றச்சாட்டு வருகிறது.

திண்டுக்கல் சீனிவாசன் பொங்கல் பாிசு ரூ.2,500, மீண்டும் டாஸ்மாக் மூலம் அரசுக்கே வரும் என்று பேசியது, அவருக்கு வயதாகிவிட்டது. அதனால்தான் இப்படி பேசுகிறார். மாழ்பழச்சின்னத்தை ஆப்பிள் எனவும், கலெக்டர், பிரதமரையும் மாற்றி மாற்றி அவர் பேசுகிறார். தேர்தல் பிரசாரம் செய்ய 18 தலைவர்களை திமுக அனுமதித்தது. அதில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  முதல்வர், அமைச்சர்கள் வேலுமணி, காமராஜ் ஆகியோர் அவா்கள் மீது கொடுக்கப்பட்ட ஊழல் புகார்களுக்கு பதில் சொல்லாமல், திமுக தலைவருக்கு பட்டப்பெயர் வைப்பதிலிருந்தே அவர்கள் அந்த ஊழல்களை ஒப்பு கொள்கிறார்கள் என்றுதான் நான் பார்க்கிறேன்.

திமுக தலைவர் ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர் என மக்கள் தீர்மானித்து விட்டனர். திமுக தலைவர் செல்லும் இடங்களில் எல்லாம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் வருகிறார்கள். அதை பொறுத்துக்கொள்ள முடியாத அதிமுகவினர் கலாட்டா செய்வதற்கு என்ன செய்ய முடியுமோ அதை செய்கிறார்கள். இந்த முறையும் நான் மேற்கு தொகுதியை கேட்பேன். அதை கொடுப்பது தலைவர் கையில்தான் உள்ளது. தமிழகத்தில் 3வது அணி, அல்லது எத்தனை அணிகள் வந்தாலும், அமித்ஷா வந்தாலும் திமுகதான் வெற்றி பெறும். இவ்வாறு அவா் கூறினார்.

Related Stories:

>