மன்னார்குடி, ஜன. 6: மன்னார்குடி கல்வி மாவட்டத்திற்குக்குட்பட்ட 38 பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை கலெக்டர் சாந்தா வழங்கினார். தமிழக அரசின் சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா மன்னார்குடியில் நடைபெற்றது. கலெக்டர் சாந்தா தலைமை வகித்து மாணவர்களுக்கு இலவச வழங்கி பேசுகையில், திருவாரூர் மாவட்டத்தில் 2020-21 கல்வியாண்டில் 91 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 பயிலும் 10,177 மாணவ, மாணவி களுக்கு ரூ.4 கோடி மதிப்பில் இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது. மன்னார்குடி ஒன்றியத்தில் உள்ள 38 பள்ளிகளை சேர்ந்த 3,605 மாணவ, மாணவி களுக்கு ரூ.1.43 கோடியில் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளது என்றார். நிகழ்ச்சியில், தாசில்தார்கள் தெய்வநாயகி, கார்த்திக், முன்னாள் நகர்மன்ற தலைவர் சிவா ராஜமாணிக்கம், நகர கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்ஜி.குமார், ஒன்றியக்குழு தலைவர்கள் சேரன்குளம் மனோகரன், மணிமேகலை முருகேசன், முன்னாள் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் பொன்வாசுகிராம், முன்னாள் ஒன்றியக் குழு துணைத்தலைவர் தமிழ்ச்செல்வன், பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட கல்வி அலுவலர் மணிவண்ணன் வரவேற்றார். முதன்மை கல்வி அலுவலர் ராமன் நன்றி கூறினார்.