×

புள்ளான்விடுதி கிராமத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்ற கோயில் இடிப்பு

புதுக்கோட்டை,ஜன.6: புள்ளான்விடுதி கிராமத்தில் இருந்த மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்ற கோயில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்களால் இடிக்கப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் அருகே உள்ள புள்ளான்விடுதி கிராமத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்ற கோயில் உள்ளது. இந்த கோயிலில் வாரந்தோறும் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் வழிபாடு நடத்துவதும் தினந்தோறும் பூஜைகள் மேற்கொண்டு வருவதும் வழக்கமாயிருந்தது. இந்நிலையை அக்கோயிலில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு புறப்பட்டு செல்ல இருந்தனர்.

இதனிடையே நேற்று முன்தினம் அந்த கோயில் பூட்டி இருந்த நிலையில் மர்ம நபர்கள் சிலர் வெடிகளை வைத்து கோயிலை தகர்த்துள்ளனர். சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி வந்து பார்ப்பதற்குள் மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து வடகாடு போலீசாருக்கு புள்ளான்விடுதி கிராம பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். இதன் அடிப்படையில் அங்கு வந்த போலீசார் இச்சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எதற்காக அந்த கோயிலை வெடி வைத்து மர்ம நபர்கள் தகர்த்தனர் என்பது குறித்தும் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறித்தும் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Demolition ,village ,Melmaruvathur Adiparasakthi Temple ,Pullanviduthi ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராமம்...