×

கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உயர்மட்டபாலம் அமைக்கும் பணி

கரூர், ஜன.6: கரூர் மாவட்டம் மதுரை சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பெரிச்சிபாளையம் மற்றும் பெரியார் வளைவு ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் உயர்மட்ட பாலங்கள் அமைப்பதற்கான கட்டுமான பணிகளை கலெக்டர் மலர்விழி தலைமையில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மதுரை சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கரூர் மாவட்டத்தில் 8 இடங்களில் உயர்மட்ட பாலம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உயர்மட்ட பாலம் அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்ய கடந்த ஐந்து ஆண்டுகளில் பலமுறை ஆய்வு நடத்தப்பட்டது. இதன் பயனாக, தற்போது செம்மடை ரவுண்டானா பகுதியில் ரூ.30.11 கோடி மதிப்பிலும், பெரிச்சி பாளையத்தில் ரூ.21.95 கோடி மதிப்பிலும், பெரியார் வளைவு பகுதியில் ரூ. 26.64 கோடி மதிப்பிலும், தவிட்டுப்பாளையத்தில் ரூ. 21.30 கோடிமதிப்பிலும் என 100 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலங்கள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், தற்போது பெரிச்சிபாளையம் மற்றும் பெரியார் வளைவு ஆகிய இடங்களில் மேம்பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், தேசிய நெடுஞ்சாலைத்துறையின் திட்ட இயக்குநர் முத்துடையார் உட்பட அனைவரும் உடனிருந்தனர்.

Tags : Karur National Highway ,
× RELATED கிருஷ்ணராயபுரம் அருகே விபத்து பஸ்-பைக் மோதல் கூலித்தொழிலாளி பரிதாப பலி