×

நகராட்சியாக தரம் உயர்ந்து 25 ஆண்டுகளாகியும் குளித்தலையில் வாடகை இடத்தில் இயங்கும் பேருந்து நிலையம் புதிதாக அமைக்க மக்கள் சப்.கலெக்டரிடம் கோரிக்கை

குளித்தலை, ஜன.6:கரூர் மாவட்டம் குளித்தலையில் தற்போது இயங்கிக்கொண்டிருக்கும் தற்காலிக பேருந்து நிலையத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் அல்லது .தற்போது உள்ள இடத்தில் இடப்பற்றாக்குறை இருப்பின் புதிய இடத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய நவீன பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க கோரி குளித்தலை பகுதி பொதுமக்கள்,சமூக ஆர்வலர்கள் சார்பில் சப்.கலெக்டர் ஷேக் அப்துல்ரஹ்மான் இடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் குறிப்பிட்டுள்ளதாவது:தமிழகத்திலேயே நகராட்சியாக இருந்தும் பேருந்து நிலையம் அமைக்க முடியாத நகராட்சி குளித்தலை மட்டுமே. திருச்சி மாவட்டத்திலிருந்து கரூர் மாவட்டம் 1995ம் ஆண்டு பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்ட அதே நேரத்தில் குளித்தலை பேரூராட்சியானது நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

அவ்வாறு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 25 ஆண்டுகளுக்கு மேலாகியும் குளித்தலை நகருக்கு நிரந்தர பேருந்து நிலையம் இன்னும் அமைக்கப்படவில்லை. பல நூற்றுக்கணக்கான மனுக்களும் கொடுக்கப்பட்டும் இன்று வரை குளித்தலையில் நிரந்தர பேருந்து நிலையத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்படவில்லை. குளித்தலையில் தற்போது இயங்கிக்கொண்டிருக்கும் தற்காலிக பேருந்து நிலையத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் அல்லது தற்போது உள்ள இடத்தில் இடப்பற்றாக்குறை இருப்பின் புதிய இடத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய நவீன பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். அனைத்து வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையத்திற்கான கட்டமைப்புடன் கூடிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். .

நகரத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்துக் கொண்டு உள்ளனர். குளித்தலை நகரானது வருவாய் கோட்ட தலைமை நகரமாகவும், வருவாய் வட்டத்தின் தலைநகராகவும், கல்வி மாவட்டத்தின் தலைநகராகவும் உள்ளது. மேலும் நீதிமன்றம், காவல் நிலையம், மகளிர் காவல் நிலையம், காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம் போன்ற அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன , பத்துக்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் வங்கிகளும் உள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் தினசரி குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். அதுமட்டுமில்லாமல் அனைத்து அலுவலகங்களுக்கும் தினசரி ஏராளமான பொது மக்கள், கல்வி கற்கும் பல ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் வெளியூர்களில் இருந்து வந்து செல்கின்றனர்.

ஆனால் தற்போது உள்ள பேருந்து நிலையம் வாடகை இடத்தில் 6 பேருந்து நிற்கும் வகையில் சிறிய அளவில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இது மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் போதிய வசதிகள் பெற்ற பேருந்து நிலையமாக இல்லை. தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் இந்த பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்கிறது. .பேருந்து நிலையத்தின் உள்ளே பேருந்துகள் நிறுத்த இடமில்லாமல் ரோட்டோரத்தில் பயணிகளை ஏற்றி இறக்கி விடுகின்றனர்.
மேலும் மணப்பாறை மார்க்கத்திலும் முசிறி துறையூர் பெரம்பலூர் சென்னை நாமக்கல் சேலம் உட்பட பகுதிகளுக்கும் இருந்து பேருந்துகள் சென்று வருகின்றன. குளித்தலை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இந்த தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து நேரடியாகப் பேருந்துகள் நாள்தோறும் பலமுறை சென்று வருகின்றன. குளித்தலை பகுதியில் பல ஆண்டுகளாக சமூக ஆர்வலர்கள் நாங்கள் நகரத்தில் ஒரு நிரந்தர பேருந்து அமைக்க போராடி கொண்டு இருக்கிறோம். இந்த மனுவை பரிசீலித்து 2021ம் ஆண்டு பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறியுள்ளனர்.

Tags : Kulithalai ,sub-collector ,bus stand ,municipality ,
× RELATED குளித்தலை அருகே ஓராண்டாக முறையாக...