கொல்லத்தில் இருந்து சேலம் வழியே விசாகப்பட்டணத்திற்கு வாராந்திர சிறப்பு ரயில் இன்று முன்பதிவு தொடக்கம்

சேலம், ஜன.6: கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து சேலம் வழியே விசாகப்பட்டணத்திற்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கு தளர்வு காரணமாக சிறப்பு ரயில்களின் இயக்கத்தை ரயில்வே நிர்வாகம் அதிகப்படுத்தி வருகிறது. இந்த வகையில், கேரள மாநிலம் கொல்லத்திற்கும், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டணத்திற்கும் இடையே கோவை, சேலம் வழியே வாராந்திர சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, விசாகப்பட்டணம்-கொல்லம் வாராந்திர சிறப்பு ரயில் (08567), வியாழக்கிழமை தோறும் இயக்கப்படுகிறது. இதன் முதல் சேவை வரும் 14ம் தேதி தொடங்குகிறது. விசாகப்பட்டணத்தில் காலை 7.25 மணிக்கு புறப்படும் இந்த ரயில், சாமல்கோர்ட், ராஜமுந்திரி, விஜயவாடா, நெல்லூர், குண்டூர், ரேணிகுண்டா, காட்பாடி, ஜோலார்பேட்டை வழியே சேலத்திற்கு அடுத்தநாள் அதிகாலை 12.37 மணிக்கு வந்து சேர்கிறது. பின்னர், 3 நிமிடத்தில் புறப்பட்டு, ஈரோட்டிற்கு அதிகாலை 1.37 மணிக்கும், திருப்பூருக்கு அதிகாலை 2.23 மணிக்கும், கோவைக்கு அதிகாலை 3.37 மணிக்கும் சென்று, பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயம், காயங்குளம் வழியே கொல்லத்திற்கு மதியம் 1.50 மணிக்கு சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில், கொல்லம்-விசாகப்பட்டணம் வாராந்திர சிறப்பு ரயில் (08568), ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இயக்கப்படுகிறது. முதல் சேவை வரும் 15ம் தேதி தொடங்குகிறது. கொல்லத்தில் இரவு 7.35 மணிக்கு புறப்படும் இந்த ரயில், கோவைக்கு அடுத்தநாள் அதிகாலை 3.27 மணிக்கும், திருப்பூருக்கு அதிகாலை 4.13 மணிக்கும், ஈரோட்டிற்கு அதிகாலை 5.10 மணிக்கும் வந்து சேலத்திற்கு அதிகாலை 6.12 மணிக்கு வந்து சேர்கிறது. பின்னர், ஜோலார்பேட்டை, காட்பாடி வழியே விசாகப்பட்டணத்திற்கு இரவு 11.40 மணிக்கு சென்றடைகிறது. இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று (6ம் தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இதனை பயணிகள் பயன்படுத்திக் கொள்ள தெற்கு ரயில்வே நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Related Stories:

>