கலப்படத்தை தடுக்க ஓமலூர், காடையாம்பட்டியில் வெல்ல ஆலைகள் கண்காணிப்பு

சேலம், ஜன. 6:  சேலம் மாவட்டம் ஓமலூர், கருப்பூர், இடைப்பாடி காடையாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெல்லம் தயாரிக்கும் ஆலைகள் உள்ளன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வெல்லம் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதில், ஒரு சில ஆலைகளில் வெல்லத்தின் கலர் பளிச்சென தெரிய சோடியம் ஹைட்ரோ சல்பைடு, சர்க்கரை, மைதா, சூப்பர் பாஸ்பேட் கலக்கப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து கலப்பட வெல்லம் தயாரிப்பதை தடுக்கும் வகையில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் 8 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்கள் மாவட்டத்தில் உள்ள வெல்ல ஆலைக்கு சென்று மாதிரி பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு  4 இடங்களில் 100க்கும் மேற்பட்ட மாதிரி சோதனைகள் சேகரித்து சென்னை உணவு பகுப்பாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து சேலம் மாவட்டம் காடையாம்பட்டி, ஓமலூர் பகுதிகளில் உள்ள வெல்ல ஆலைகளை அதிகாரிகள்  கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.  இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், ,கலப்பட  வெல்லத்தால், அல்சர், புற்றுநோய் வர வாய்ப்பு இருக்கிறது. கலப்பட வெல்லம் தயாரிக்கும் ஆலைகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வெல்லத்தை கொண்டு வருவபவர்களும், வாங்குபவர்களும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் உரிமம் பெற வேண்டும். அவ்வாறு உரிமம் இல்லாமல் வெல்லத்தை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கலப்பட வெல்லத்தை தடுக்கும் வகையில் குழு அமைக்கப்பட்டு, வெல்ல ஆலையில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர், என்றனர்.      

Related Stories:

>