×

பள்ளிக்கு வரும் நிதியை சொந்த பணமாக நினைக்கிறார்கள் பேஸ்புக்கில் வேதனை தெரிவித்த ஆசிரியர் கல்வி அதிகாரி பள்ளிக்கு சென்று விசாரணை

சேலம், ஜன. 6: சேலம் அருகே பேஸ்புக்கில் ஆசிரியர் புகார் தெரிவித்த விவகாரம் தொடர்பாக, மாவட்ட கல்வி அலுவலர் நேரடி விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. சேலம் இடைப்பாடி கல்வி மாவட்டத்திற்குட்பட்ட மேச்சேரி அடுத்த வெள்ளாறில், அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அப்பகுதியைச் சேர்ந்த 1,200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இப்பள்ளியில் படித்து வருகின்றனர். பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் ஒருவர், சமீபத்தில் தனது பேஸ்புக்கில் பரபரப்பு புகார் ஒன்றை வேதனையுடன் தெரிவித்திருந்தார். அதில், “கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் போன்று, காலந்தோறும் ஆதாரங்கள் ஏதும் இன்றி பல சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளிக்கு வரும் நிதியை அவர்கள் சொந்த பணம் போல் நினைத்துக் கொள்கின்றனர். பொய்க்கணக்கு எழுத எல்லா பள்ளிகளிலும் ஒரு ஆசிரியர் இருப்பார்.

எங்கள் பள்ளியில் இரண்டாண்டுகளுக்கு முன்பு, விளையாட்டு போட்டியை நடத்த வேண்டிய பொறுப்பில் இருந்த ஒருவர், சான்றிதழ்கள் மற்றும் மெடல்களுக்காக ₹20,000 பெற்றுக் கொண்டார். ஆனால் வெறும் ₹5,000 மதிப்புள்ள பொருட்களை தந்தார். உடற்கல்வி ஆசிரியர் கடந்த 2 ஆண்டுகளில், 20 நாட்கள் தான் பள்ளிக்கு வந்திருப்பார். எந்த அதிகாரியிடம் முறையிட்டும் யாரும் நடவடிக்கை எடுப்பதாக இல்லை. இப்படி எண்ணற்ற ஊழல்கள் கல்வித் துறையில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. கோவை மாவட்ட அதிகாரி மட்டும் குற்றவாளி அல்ல. மாவட்டந்தோறும், கல்வி மாவட்டம் தோறும், பள்ளிகள் தோறும் இத்தகையோர் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள்,” என அதில் தெரிவித்திருந்தார்.

 இந்த பதிவு குறித்து விசாரணை நடத்த, சிஇஓ கணேஷ்மூர்த்தி, மாவட்ட கல்வி அலுவலர் விஜயாவிற்கு உத்தரவிட்டார். இதனையடுத்து நேற்று பள்ளிக்கு சென்ற டிஇஓ விஜயா, இந்தவிவகாரம் குறித்து விசாரணை நடத்தினார். அப்போது, உடற்கல்வி ஆசிரியர் மற்றும் சக ஆசிரியர்களின் வருகைப்பதிவு குறித்து, பதிவேடுகளை பார்வையிட்டார். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “பேஸ்புக் பதிவு மற்றும் புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட பள்ளியில் விசாரணை நடந்தது. ஆசிரியர்களின் வருகைப்பதிவேடு மற்றும் அவர்கள் மாற்றுப்பணிக்கு சென்றது தொடர்பாக, விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மேலும், பதிவேடுகளும் ஆய்வு செய்யப்பட்டன. பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் மத்தியில், காழ்ப்புணர்ச்சி நிலவி வருகிறது. இதுகுறித்து உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று, அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,” என்றனர்.

Tags : teacher education officer ,school ,
× RELATED வத்திராயிருப்பு அரசு பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி