நாட்டரசன்கோட்டையில் ஜன.9ல் செவ்வாய் பொங்கல் விழா

சிவகங்கை, ஜன.6: நாட்டரசன்கோட்டையில் செட்டிநாட்டு பாரம்பரியத்தை சொல்லும் செவ்வாய் பொங்கல் விழா ஜன.19ல் நடக்க உள்ளது. சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில் கண்ணுடையநாயகி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் மாட்டுப் பொங்கல் முடிந்து வரும் முதல் செவ்வாய் கிழமை மாலை நகரத்தார்களால் செவ்வாய் பொங்கல் விழா விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் வரும் ஜன.19 அன்று மாலை செவ்வாய் பொங்கல் விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.

நகரத்தார் சமூகத்தை சேர்ந்த ஆண்களுக்கு திருமண முடிந்தவுடன் அவர்கள் “ஒரு புள்ளியென” கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவார்கள். இவ்வாறு புள்ளிகள் எண்ணிக்கையில் அதிகமானோர் பொங்கலிடும் நிகழ்ச்சி நாட்டரசன்கோட்டையில் மட்டுமே நடப்பதால் இந்த விழா அதிக முக்கியத்துவம் பெறுகிறது. மேலும் மற்ற சமூகத்தை சேர்ந்தவர்கள் அம்மனுக்கு வேண்டுதல் வைத்து அவர்களும் தனியே வரிசையாக பொங்கல் வைப்பார்கள்.

இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா பரவலால் பொங்கல் விழா நடத்தப்படுவதில் சிக்கல் எழுந்தது. இந்நிலையில் கலெக்டர் மதுசூதன்ரெட்டியிடம் தேவஸ்தான நிர்வாகம், நகரத்தார், பொதுமக்கள் சார்பில் பொங்கல் விழா நடத்த அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா விதிமுறைகளை பின்பற்றி விழா நடத்த கலெக்டர் அனுமதியளித்ததையடுத்து விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. நகரத்தார் கூறியதாவது,‘வேண்டுதலின் பேரிலேயே இந்த விழா நடைபெற தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு தடைபட்டு விடுமோ என்ற அச்சம் நிலவியது. ஆனால் விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டு நகரத்தார் சமூகம் சார்பில் மட்டும் சுமார் 900க்கும் மேற்பட்டோர் பொங்கல் வைக்க உள்ளனர். ஒரு முறை இந்த ஊரை கொடிய நோய் தாக்கியபோது அம்மனுக்கு ஊரே சேர்ந்து ஓரிடத்தில் பொங்கல் வைப்பதாக வேண்டிக் கொண்டதன் பேரில் நோய் தீர்ந்ததாக கூறப்படுகிறது.

அப்போதிருந்து சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக இந்த விழா நடைபெற்று வருகிறது. பொங்கலிடுவதற்கான பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறோம் என்றனர்.

Related Stories:

>