×

ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் தமுமுக கோரிக்கை

சாயல்குடி, ஜன.6:  18 கிராம மக்கள் பயன்படுத்தும் வாலிநோக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் என தமுமுக வாலிநோக்கம் கிளை சார்பாக கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, வாலிநோக்கம் கடற்கரை கிராமத்தில் சுமார் 3000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. அருகிலுள்ள தனிச்சியம், கிருஷ்ணாபுரம், சேரந்தை, சேனாங்குறிச்சி, அடஞ்சேரி, கீழமுந்தல், மேலமுந்தல் உள்ளிட்ட 18 கிராமங்கள் உள்ளன. வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனத்தில் 110 நிரந்தர பணியாளர்கள், 1,350 ஒப்பந்த பணியாளர்கள், 500க்கும் மேற்பட்ட தினக்கூலி பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வாலிநோக்கத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டது. இங்கு சளி, காய்ச்சல், சர்க்கரை அளவு, இருதய துடிப்பு, கொழுப்பு, ரத்த பரிசோதனை போன்ற ஆரம்ப கட்ட பரிசோதனை, நோய்களை பார்ப்பது கிடையாது. போதிய மருத்துவ வசதிகள் இல்லாததால் அவசர மருத்துவ உதவி பெற பொதுமக்கள் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு செல்ல அஞ்சும் நிலை உள்ளது. பிரசவங்கள் பார்க்கப்பட்டு வந்த நிலையில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உபகரணங்கள் இன்றி பிரசவம் பார்ப்பது கிடையாது.

சிறு காய்ச்சல் முதல் கர்ப்பிணி பெண்கள் மகப்பேறு கால பரிசோதனைகள், பிரசவத்திற்கு சாயல்குடி, ராமநாதபுரம், தூத்துக்குடி செல்லும் அவலம் உள்ளது. இதனால் கூடுதல் பணம் செலவு, நேரவிரயம் ஏற்படுகிறது. சில நேரங்களில் காலதாமதத்தால் உயிரிழப்பும் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே வாலிநோக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி பெண் மருத்துவர்கள் உள்ளிட்ட புதிய மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்களை நியமிக்க வேண்டும். கர்ப்பிணி தாய்மார்களுக்கும், பச்சிளம் குழந்தைகளுக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு வாரத்திற்கு ஒருமுறை சிறப்பு மகப்பேறு பெண் மருத்துவரை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Tags : Tamumuka ,health center ,
× RELATED ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் விழிப்புணர்வு