விஷேச நாட்கள் இல்லாததால் திண்டுக்கல்லில் பூக்கள் விலை இருமடங்கு குறைந்தது

திண்டுக்கல், ஜன.6: திண்டுக்கல்லில் விஷேச நாட்கள் இல்லாததால் பூக்கள் விலை குறைந்துள்ளது. திண்டுக்கல் பூ மார்க்கெட்டிற்கு வடமதுரை, மாமரத்துபட்டி, கடவூர், நத்தம், வேலாயுதபாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. தற்போது பெய்து வரும் மழை காரணமாக பூக்களில் ஈரப்பதம் அதிகரித்துள்ளதால் அழுகி விடுகிறது. மேலும் இந்த மாதம் விசேஷ நாட்கள் இல்லாததால் பூக்களின் விலையும் அதிகரிக்கவில்லை.  கடந்த வாரம் ரூ.100க்கு விற்கப்பட்ட செவ்வந்திப் பூ  தற்போது  30 ரூபாய்க்கும்,  சம்மங்கி பூ கடந்த வாரம் ரூ.80க்கு விற்கப்பட்டது. தற்போது 30 ரூபாயாக குறைந்துள்ளது.

ரோஜா பூ கடந்த வாரம்  100 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது அதே விலையில் விற்பனையாகிறது. கடந்த வாரம் ரூ.3,500க்கு விற்பனையான மல்லிகைப்பூ வரத்து குறைவால் அதே நிலையிலேயே உள்ளது. மல்லிகை பூ பனிப்பொழிவால் செடியிலேயே மொட்டு கருகி விடுகிறது. இதனால் விளைச்சல் குறைந்து வரத்து குறைந்துள்ளது.

விவசாயி சுப்பிரமணி கூறுகையில், ‘‘கடந்த வாரம் எல்லா பூக்களின் விலையும் உயர்ந்து இருந்தது. தற்போது மழை மற்றும் பனிப் பொழிவால் பூக்களின் விலையும், விளைச்சலும் குறைந்துள்ளது.  செவ்வந்தி, செண்டு மல்லி, சம்பங்கி பூக்களின் விலை மிகவும் குறைந்துள்ளதால் கூலி கூட வழங்க முடியவில்லை.  அதேபோல் கடந்த வாரம் மல்லிகைப்பூ 3,500க்கு விற்பனையானது. இந்த வாரமும் அதன் விலை உயராமல் அப்படியே நீடிக்கிறது’’ என தெரிவித்தார்.

Related Stories:

>