×

தொடரும் தற்கொலை முயற்சிகள் எதிரொலி கலெக்டர் அலுவலகத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

நாகர்கோவில், ஜன.6:  நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணிக்காக நேற்று முதல் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக தற்போது மனுக்கள் பெறுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை தோறும் நடைபெறுகின்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவில்லை. விவசாயிகள் கோரிக்கை தின கூட்டம் மற்றும் மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் போன்றவையும் நடைபெறவில்லை. இந்நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் யாரும் மனு அளிக்க வர வேண்டாம் என்றும், ஆன்லைன் மூலமாக மனுக்களை பதிவு செய்யலாம் எனவும் கலெக்டர் தெரிவித்துள்ளார். இந்தநிலையிலும் கலெக்டர் அலுவலகத்தில் மனுக்களுடன் வருகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

அவ்வாறு வருகிறவர்கள் தங்களது கோரிக்கை நிறைவேறாத காரணத்தினாலும், மன வேதனையாலும் கலெக்டர் அலுவலகத்திலேயே பெட்ரோல் அல்லது மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய முயலும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. பலத்த போலீஸ் பாதுகாப்பு இருந்தபோதிலும் நேற்று முன்தினம் மீண்டும் ஒரு தற்கொலை முயற்சி சம்பவம் நடந்தது. இதையடுத்து நேற்று ஆயுதப்படை போலீசார் உள்பட கூடுதல் போலீசார் கலெக்டர் அலுவலக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

அவர்கள் கலெக்டர் அலுவலக 2 பிரதான நுழைவு வாயிலிலும் நின்று அலுவலகம் வரும் அனைவரின் உடமைகளையும் பரிசோதித்த பின்னரே அனுமதிக்கின்றனர். கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தவர்களை போலீசார் திருப்பி அனுப்பினர். இ-சேவை மையங்களில் ஆன்லைன் மூலமாக மனு அளிக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். போலீஸ் குவிப்பால் கலெக்டர் அலுவலக பகுதிகள் பரபரப்புடன் காணப்பட்டது.

Tags : Office ,Echo Collector ,
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...