விழுப்புரத்தில் பரபரப்பு எஸ்பிக்கு தற்கொலை மிரட்டல் கடிதம் அனுப்பிய ஆயுதப்படை காவலர்

விழுப்புரம், ஜன. 6: விழுப்புரம் மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு ஆயுதப்படை காவலர் தற்கொலை மிரட்டல் கடிதம் அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்ட எஸ்பி ராதாகிருஷ்ணனுக்கு நேற்று முன்தினம் தபால் மூலம் ஒரு கடிதம் வந்தது. அதில் அனுப்புனர் பெயர், முகவரி இல்லாமல் இருந்தது. அதில், ஆயுதப்படை போலீஸ்காரர் ஒருவர் எழுதி இருப்பது தெரிந்தது.

அந்த கடிதத்தில் எழுதியிருப்பதாவது:  நான் கடந்த 2013ம் ஆண்டு நேரடியாக ஆயுதப்படைக்கு தேர்வாகி 8 ஆண்டுகளாக விழுப்புரம் ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2017ம் ஆண்டு சென்னைக்கு குடும்ப சூழல் காரணமாக மாறுதலாகி பின் அதே ஆண்டு விழுப்புரத்துக்கு பணிமாறுதல் பெற்று வந்துவிட்டேன். ஆனால் என்னுடைய முன்னுரிமை மாற்றுதலாகிவிட்டது. என்னுடன் பணியில் சேர்ந்த சக காவலர்கள், தாலுகா போலீஸ் நிலையத்திற்கு சென்றுவிட்டனர். நான் மட்டும் ஆயுதப்படை பிரிவிலேயே பணியாற்றி வருகிறேன். இதனால் எனது வீட்டில் சந்தேகத்திற்கு

இடமளித்துவிட்டது.

கடந்த 2 ஆண்டுகளாக எனது குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை ஏற்படுகிறது. ஆயுதப்படையில் பணியாற்றி வரும் போலீஸ்காரர்களுக்கு முறையாக பணிமாறுதல் வழங்காமல் போலீஸ் அதிகாரிகள் கஷ்டப்படுத்துகிறார்கள். எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது என்பதை மறந்துவிட்டார்கள். நான் 2018ல் இருந்து இதுவரை 5 முறை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு விருப்ப மனு பெறப்பட்டு இதுவரை எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. என்னுடைய இறப்புக்கு பிறகு நான் யார் என்று தெரியவரும்.

அதன் பிறகாவது இதுபோன்ற பிரச்னையால் போலீஸ்காரர்கள் இறப்பதை குறைக்க வழிவகை செய்யுங்கள். நான் இறந்த பிறகு என்னுடைய குறையை சரி செய்ய தேவையில்லை. என் இறப்புக்கு காரணம் சொல்லிவிட்டேன். ஆனால் என்னுடைய இறப்பை எந்த சூதாட்டத்திலும் சம்பந்தப்படுத்திவிடாதீர்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து விழுப்புரம் எஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த தற்கொலை மிரட்டல் கடிதம் விழுப்புரம் மாவட்ட காவல்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>