×

உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்கும் விவகாரம் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்

திருப்பூர், ஜன. 6:  உப்பாறு அணைக்கு தண்ணீர் திறப்பது தொடர்பாக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் உறுதியளித்துள்ளார். தாராபுரம் அருகே உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறக்கக்கோரி அப்பகுதி விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட உப்பாறு பாசன விவசாயிகள் சங்கத்தினர் கடந்த டிசம்பர் 8ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை 24 நாள்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அணையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர்.

இதையடுத்து, விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய தாராபுரம் வட்டாட்சியர் ராமலிங்கம் கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தார். இதன்படி, திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில், உப்பாறு அணைக்குத் தண்ணீர் திறப்பது தொடர்பாக தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு மிக விரைவில் தண்ணீர் திறக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாயிகளிடம் கலெக்டர் உறுதியளித்தார். இந்தப் பேச்சுவார்த்தையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டல், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயசந்திரன், தாராபுரம் வட்டாட்சியர் ராமலிங்கம், திருப்பூர் மாவட்ட உப்பாறு பாசன விவசாயிகள் சங்கத்தலைவர் அர்ஜூனன், செயலாளர் சுந்தரசாமி, நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சிவகுமார், முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Upparu Dam ,government ,
× RELATED ஒன்றிய அரசு குறித்து அமெரிக்கா மீண்டும் விமர்சனம்