மாவட்டத்தில் வரும் 17ம் தேதி 1154 முகாம்களில் 2.80 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ மருந்து

திருப்பூர், ஜன. 6:  திருப்பூர், மாவட்டத்தில் மொத்தம் 1,154 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் வரும் 17ம் தேதி நடைபெறவுள்ளது. இதன் மூலம் சுமார் 2.80 லட்சம் குழந்தைகள் பயன்பெற உள்ளனர் என கலெக்டர் தெரிவித்தார். இதுகுறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் நேற்று கூறியதாவது:  போலியோவை ஒழிக்கும் வகையில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு  போலியோ சொட்டு மருந்து முகாம் வரும் 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.

திருப்பூர் மாவட்டத்தில் 1,154 மையங்களில் 17ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை 5வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டசத்து மையங்கள், பள்ளிக்கூடங்கள், பஞ்சாயத்து அலுவலகங்கள், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், டோல்கேட் மற்றும் தனியார் சொட்டு மருந்து முகாம் மையங்களிலும் வழங்கப்பட உள்ளது.

இவற்றில் 26 நடமாடும் சொட்டு மருந்து முகாம்களிலும், 23 போக்குவரத்து முகாம்களிலும், போலியோ சொட்டு மருந்து இலவசமாக வழங்கப்படவுள்ளது. இப்பணிக்காக பல்வேறு துறைகளைச் சார்ந்த 4780 பணியாளர்கள் மற்றும் ரோட்டரி சங்கத்தினர் ஈடுபடவுள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 2.80 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது. இம்முகாம்களுக்கு தேவையான சொட்டு மருந்து குளிர் பதன நிலையில் தயார் நிலையில் உள்ளது. ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இதுவரை எத்தனை முறை சொட்டு மருந்து அளித்திருந்தாலும் இம்முறை கூடுதல் தவணையாக போலியோ சொட்டு மருந்து வழங்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>