×

நூல் விலை உயர்வை மறுபரிசீலனை செய்ய சைமா வலியுறுத்தல்

திருப்பூர், ஜன. 6: நூல் விலை உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நூற்பாலை சங்கங்களுக்கு, சைமா சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க (சைமா) தலைவர் வைகிங் ஏ.சி. ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து ஆகஸ்டு மாதம் வரை பின்னலாடை நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி வைத்திருந்தன. நூற்பாலைகளும், பின்னலாடை நிறுவனங்களும் இதனால் பாதிக்கப்பட்டன. திருப்பூர் நகரில் பின்னலாடை தொழிலும், நூற்பாலைகளும் ஒன்றுடன், ஒன்று தவிர்க்க முடியாத அங்கங்களாகும். நூற்பாலைகளால் பின்னலாடை தொழிலும், பின்னலாடை தொழிலால் நூற்பாலைகளும் வளர்ச்சி பெற்றன.  கொரோனா ஊரடங்கால் 6 மாதங்களாக பாதிக்கப்பட்ட பின்னலாடை தொழில் செப்டம்பர் மாதத்திற்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பியது. இயல்பு நிலைக்கு வந்ததும், நூற்பாலைகள், ஜாப் ஒர்க் நிறுவனங்கள் என அனைத்து நிலைமையும் பரிசீலித்த எங்கள் உறுப்பினர்கள் கடந்த 1.1.2021 முதல் பின்னலாடை விலையை நிர்ணயித்து வியாபாரத்தை தொடங்கினர்.

கடந்த டிசம்பர் மாத நூல் விலையை கணக்கில் எடுத்துக்கொண்டு (ஆகஸ்டு 2020 முதல் டிசம்பர் 2020 வரை உயர்ந்த நூல் விலை ரூ.30 கணக்கில் எடுத்துக்கொண்டு) பின்னலாடை விலையை நிர்ணயித்தனர். இந்திய ஜவுளித்தொழில் கூட்டமைப்பு கடந்த 25ம் தேதி நடத்திய காணொலி கூட்டத்திலும், 29ம் தேதி எழுதிய கடிதத்திலும் நூற்பாலைகள் 2 மாதங்களுக்கு விலையேற்றம் செய்ய வேண்டாம், தட்டுப்பாடின்றி நூல் வினியோகம் செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளது.

அதன்படி ஜனவரி 1ம் தேதி எந்த விலையேற்றமும் இருக்காது என்ற நம்பிக்கையுடன் இருந்த எங்கள் உறுப்பினர்களுக்கு ரூ.12 முதல் ரூ.17 வரை விலை உயர்வு இருந்தது அதிர்ச்சியளிக்கிறது. திடீரென மூலப்பொருட்களின் விலை அதிகமான நிலையில், ஏற்கனவே அறிவித்த விற்பனை விலையை எங்களால் எந்த மாற்றமும் செய்ய முடியாத அளவிற்கு சிரமத்திற்குள்ளானோம். எனவே கடந்த 1ம் தேதி உயர்த்தப்பட்ட நூல் விலையை நூற்பாலை சங்கங்கள் மறுபரிசீலனை செய்து அதிகபட்சம் எவ்வளவு குறைக்க முடியுமோ, அதை தீர்மானித்து அறிவிக்க வேண்டும். மேலும், உள்நாட்டு உற்பத்திக்கு தேவையான அளவு நூல் வைத்துக்கொண்டு, மீதமுள்ளதை ஏற்றுமதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம்.

திருப்பூர் பின்னலாடை தொழில் சுமுகமாக இயங்குவதற்கு தங்களது ஒத்துழைப்பு மிக உதவிகரமானதாக இருக்கும். இனி வருகிற காலங்களில் நூல் விலை உயர்வு 3 அல்லது 6 மாதத்திற்கு ஒருமுறை செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் 2 தொழில்களும் சிறப்பாக இருக்கும். பஞ்சு விலையை சீராக வைத்துக்கொள்ளும்படி மத்திய அரசுக்கு கடிதமும் எழுதப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Saima ,
× RELATED பருத்தி விலை ஏற்றம் காரணமாக நூற்பாலைகள் பீதி அடைய வேண்டாம்