×

கலப்பட தேயிலை தூள் பயன்படுத்தி தேநீர் விற்றால் கடைகளுக்கு சீல்

ஊட்டி, ஜன. 6: நீலகிரி மாவட்டத்தில் கலப்பட தேயிலை தூளை பயன்படுத்தும் தேநீர் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது. உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் தங்க விக்னேஷ் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சிவராஜ் மற்றும் நந்தகுமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று கோத்தகிரி பஸ் நிலையம் பகுதியில் உள்ள உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

 அப்போது கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தப்படுகிறதா, உணவு பொருள் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதியாகும் தேதி அச்சிடப்பட்டுள்ளதா, சுகாதாரமான முறையிலும் தரமான வகையிலும் தயாரிக்கப்படுகிறதா, கடைகளுக்கு உணவு பாதுகாப்பு உரிமங்கள் பெறப்பட்டுள்ளனவா என்பது குறித்து சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ஒரு சில பேக்கரிகள் மற்றும் தேனீர் கடைகளில் கலப்பட தேயிலை தூளை பயன்படுத்தி தேனீர் தயாரித்து பொதுமக்களுக்கு வழங்கி வந்தது தெரியவந்தது.சம்மந்தப்பட்ட கடைகளில் இருந்து கலப்பட தேயிலை தூள் பறிமுதல் செய்தனர். பின் அதனை அழித்தனர். மேலும், கலப்பட தேயிலை தூள் பயன்படுத்திய கடைகள் மற்றும் உணவு பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய கடை உரிமையாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதே போல் 5கிலோ கலப்பட தேயிலை பறிமுதல் செய்யப்பட்டது. காலாவதியான ரூ.4 ஆயிரம் மதிப்பிலான உணவு பொருள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. இதே போல் கடைகளில் பணிபுரிந்தவர்கள் மாஸ்க் அணியாதது தொடர்பாக ரூ.4 ஆயிரம் வரை அரபாம் விதிக்கப்பட்டது.

மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் தங்க விக்னேஷ் கூறுகையில், குன்னூர் பகுதியில் இருந்து ஒரு சில வியாபாரிகள் தேயிலை தூளில் சாயத்தை கலப்படம் செய்து, கோத்தகிரி பகுதிக்கு வந்து விற்பனை செய்து வருவதாக தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து கோத்தகிரியில் பகுதிகளில் உள்ள தேநீர் கடைகள் மற்றும் பேக்கிரிகளில் ஆய்வு செய்தோம். தேயிலை தூளில் கலக்கப்படும் சாயத்தால், அதைப் பயன்படுத்துபவர்களுக்கு கேன்சர் நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, கடைக்காரர்கள் இதுபோன்ற கலப்பட தேயிலை தூளை வாங்கி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மீறி கலப்பட தூளைப் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், அந்த கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்படும்.

உணவு பொருட்களை விற்பனை செய்யும் அனைத்து கடைக்காரர்களும் உணவு பாதுகாப்பு உரிமம் (லைசென்ஸ்) கட்டாயமாக பெற வேண்டும். உணவுப்பொருட்களில் கலப்படம் செய்வது குறித்து தகவல் தெரிவிக்க நகரின் முக்கிய பகுதிகளில் தொலைபேசி எண்ணுடன் கூடிய அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. உணவு பொருட்களில் கலப்படம் குறித்து பொதுமக்கள் 9444042322 அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம், என்றார்.

Tags : Seal stores ,
× RELATED மேட்டுப்பாளையம் வாக்குச்சாவடி மையத்தில் மேற்கு மண்டல ஐஜி நேரில் ஆய்வு