×

கோவையில் பரபரப்பு கார்கள் மீது மோதி மேம்பாலத்தில் தொங்கிய தனியார் பேருந்து

கோவை, ஜன.6: கோவையில் தனியார் பேருந்து இரு கார்கள் மீது மேம்பாலத்தில் தொங்கி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவையில் இருந்து நேற்று காலையில் 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் பேருந்து பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ் ஈச்சனாரி பிரிவு அருகே உள்ள சிட்கோ மேம்பாலத்தில் சென்றபோது எதிரே வந்த கார் நிலை தடுமாறி பேருந்து மீது மோதியது. இதில் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து தாறுமாறாக ஓடியது. அப்போது அந்த வழியாக வந்த மேலும் 2 கார்கள் மீது அடுத்தடுத்து பேருந்து மோதியது.

அப்போதும் பேருந்து நிற்காமல் மேம்பாலத்தில் உள்ள தடுப்புகளை உடைத்துக்கொண்டு பாலத்தின் மீது அந்தரத்தில் தொங்கியபடி நின்றது.
 பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர். பேருந்தின் பின் பக்கம் வழியாக பயணிகள்  பாதுகாப்பாக இறக்கப்பட்டனர். இந்த விபத்தில் பேருந்து மற்றும் கார்களில் இருந்த 14 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.  காரில் பயணம் செய்த பொள்ளாச்சியை சேர்ந்த அஜய் (25), அவரது அக்காள் காஞ்சனா தேவி (35) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கிரேன் மூலமாக தொங்கிய பேருந்தை மீட்டனர். பேருந்து மேலும் சில அடி தூரம் நகர்ந்து சென்றிருந்தால் தலைகீழாக கவிழ்ந்திருக்கும். சுமார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும். ஆனால் மேம்பால தடுப்பு தூண்களால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பேருந்தில் பயணம் செய்தவர்கள், கார்கள் மீது பேருந்து மோதி தறி கெட்டு பாய்ந்ததால் அதிர்ச்சி அடைந்தோம். அதிர்ஷ்டவசமாக பேருந்து நின்றுவிட்டது. கவிழ்ந்திருந்தால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும் என்றனர். பேருந்தில் விபத்தில் ஏற்படுத்திய டிரைவர், கண்டக்டர் அங்கேயிருந்து தப்பியோடி விட்டனர்.

Tags : Coimbatore ,
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...