×

சத்தியமங்கலம் நகராட்சி அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் தர்ணா

சத்தியமங்கலம், ஜன. 6: சத்தியமங்கலம் நகராட்சியில்  தூய்மை பணியாளர்களை பணி நீக்கம் செய்ததை கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சத்தியமங்கலம் நகராட்சியில் தனியார் நிறுவனத்தின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் 118 பேர் தற்காலிக தூய்மை பணியாளர்களாக பணியாற்றி  வருகின்றனர். இவர்கள் தினமும் காலையில் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பை உள்ளிட்டவைகளை சேகரித்து நகராட்சி குப்பை கிடங்கிற்கு கொண்டு சென்று தரம் பிரிக்கும் பணி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென 6 தூய்மை பணியாளர்களை தனியார் நிறுவனம் பணி நீக்கம் செய்தது. இவர்களுக்கு பதிலாக புதியதாக ஆட்களை பணியில் சேர்த்ததால், ஏற்கனவே பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்களை மீண்டும் பணியில் சேர்க்க கோரி 30க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் நேற்று மதியம் சத்தியமங்கலம் நகராட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதோடு, நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷமிட்டனர்.

இது குறித்து தகவலறிந்த நகராட்சி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து பணி நீக்கம் செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்களை மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்வதாக தனியார் ஒப்பந்த நிறுவனத்தினர் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. நகராட்சி அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

Tags : cleaning staff ,Satyamangalam Municipal Office ,Dharna ,
× RELATED வாக்காளர்களுக்கு பாஜ பணம் பட்டுவாடா...